தாய்லாந்து குகையில் சிக்கிய அனைவரும் வெற்றிகரமாக மீட்பு : உலகம் முழுவதிலுமிருந்து குவிகிறது பாராட்டு

தினகரன்  தினகரன்
தாய்லாந்து குகையில் சிக்கிய அனைவரும் வெற்றிகரமாக மீட்பு : உலகம் முழுவதிலுமிருந்து குவிகிறது பாராட்டு

பாங்காக்: தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையில் சிக்கிய 13 பேரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். கால்பந்து குழுவைச் சேர்ந்த 12 சிறுவர்களும், பயிற்சியாளர் ஒருவரும் கடும் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக இன்று மீட்கப்பட்டுள்ளனர். முன்னதாக தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள சுற்றுலா தளமான ‘தாம் லுவாங்’ குகைக்குள் கடந்த மாதம் 23ம் தேதி உள்ளூர் கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் ஒருவர் சுற்றிப் பார்க்க சென்ற போது, கனமழை வெள்ளத்தால் சிக்கிக் கொண்டனர். குகைக்குள் சுமார் 4 கி.மீ. தூரம் வரை சென்ற சிறுவர்களும், பயிற்சியாளரும் மேடான பகுதியில் தஞ்சமடைந்தனர். தாய்லாந்து கடற்படை வீரர்களுடன், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நீச்சல் நிபுணர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.ஒரு வார தேடுதலுக்குப் பிறகு, குகைக்குள் சிக்கியிருந்த சிறுவர்களின் இருப்பிடத்தை இங்கிலாந்து நீச்சல் நிபுணர்கள் கண்டுபிடித்தனர். குகைக்குள் பல இடங்களில் மிகவும் குறுகிய வழிப்பாதைகளால் வெள்ள நீர் தேங்கியிருந்ததால், நீச்சல் தெரியாத அந்த சிறுவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே, அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்ததால், குகைக்குள் மீண்டும் வெள்ள நீர் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது. எனவே, உடனடியாக சிறுவர்களை வெளியே கொண்டு வருவதற்காக மிகவும் ஆபத்தான மீட்புப்பணியை மேற்கொள்ள மீட்பு குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, மீட்புப் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், முழு உடல் தகுதியுடன் இருந்த 4 சிறுவர்கள் வெற்றிகரமாக வெளியே கொண்டு வரப்பட்டனர்.பின்னர் 2ம் நாளாக நேற்று நடந்த மீட்பு பணியில், குகைக்குள் சிக்கிய மேலும் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். பயிற்சியாளர் உட்பட எஞ்சிய 5 பேரும் இன்று வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் குறைந்தது 7 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்வார்கள் என்றும், அவர்களை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் குகையில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்ட மீட்பு குழுவினருக்கு உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

மூலக்கதை