உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் ஓய்வு

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த மூத்த நீதிபதியாக பதவி வகித்தவர் செல்லமேஸ்வர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள இவர் தலைமை நீதிபதிக்கு எதிராக சமீபத்தில் போர்கொடி தூக்கினார்.

வழக்குகள் ஒதுக்கீடு விஷயத்தில் தலைமை நீதிபதி விதிகளுக்கு முரணாக செயல்படுகிறார் என்று செல்லமேஸ்வர் தலைமையில் 4 நீதிபதிகள் உச்ச நீதிமன்றம் அருகே வெளிப்படையாக பேட்டி கொடுத்தனர். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சுமார் 7 ஆண்டுகள் பதவி வகித்து வந்த செல்லமேஸ்வர் இன்று ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து, அவருக்கு உச்ச நீதிமன்றம் சார்பில் பிரிவு உபசார விழா நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தனக்கு நீதிமன்றம் சார்பிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ யாரும் பிரிவு உபசார விழா நடத்த வேண்டாம் என்று அவர் ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் நீதிபதி செல்லமேஸ்வர் குறிப்பிடும்போது, “ நமக்கு விருப்பமில்லாத பல விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. இதை உச்ச நீதிமன்றம் தடுக்கவில்லை என்றால் நாட்டின் ஜனநாயகத்தை யாரும் காப்பாற்ற முடியாது.

ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் அது  சுதந்திரமான, பாரபட்சமில்லாத நீதிபதிகளால்தான் முடியும்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

.

மூலக்கதை