காஷ்மீர் எல்லையில் என்எஸ்ஜி படை குவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீர் எல்லையில் என்எஸ்ஜி படை குவிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த சிறப்பு கமாண்டோ படையினர் (என்எஸ்ஜி) அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தொலைவில் இருக்கும் இலக்கையும் துல்லியமாகச் சுடும் ஸ்னிப்பர் துப்பாக்கிகள், ரேடார்கள் என உயரிய தொழில்நுட்ப உதவியுடன் பணியாற்றவுள்ள இந்த வீரர்கள், ஹம்ஹஹா பகுதியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் முகாமில், அவர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்புப் பகுதியிலும் ஊடுருவி துல்லியத் தாக்குதல் நடத்தும் திறன்பெற்ற ஹெச்ஐடி கமாண்டோபடையைச் சேர்ந்த 12 ஸ்னிப்பர் வீரர்கள் கடந்த 2 வாரங்களாக அங்கு பயிற்சியில் இருக்கின்றனர்.



தேவையேற்படும் சூழலில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் முகாமில், 100 என்எஸ்ஜி கமாண்டோ படையினரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீரர்கள் விமானக் கடத்தல் தடுப்பிலும் திறன் பெற்றுள்ளதால், விமான நிலையத்துக்கு அருகே அவர்களுக்கு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

எல்லையில் பாதுகாப்புப் படையினரின் பலி எண்ணிக்கையை குறைத்தல், எல்லை தாண்டும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்துதல், யாத்ரீகர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள என்எஸ்ஜி கமாண்டோ படையினர் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

.

மூலக்கதை