தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி: ராஜ்நாத்சிங் திட்டவட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி: ராஜ்நாத்சிங் திட்டவட்டம்

லக்னோ: ஜம்மு-காஷ்மீரில் விரைவில் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல்வராக இருந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்திக்கு அளித்து வந்த ஆதரவை பாஜ விலக்கிக் கொண்டதை தொடர்ந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், அங்கு முழு அமைதி திரும்ப வேண்டும் என்பது மட்டுமே அரசின் விருப்பமாக உள்ளது.

இதற்கான பணிகளில் தான் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது. காஷ்மீரில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி அங்கு அமைதியை கொண்டு வருவது எங்களின் மிகப்பெரிய இலக்கு.

தீவிரவாதிகளை தேடி அழிக்கும் பணிகளில் ஈடுபட நமது பாதுகாப்பு படை எப்போதும் தயாராக உள்ளது. மாநிலத்தில் அமைதி ஏற்பட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

தீவிரவாதிகளின் எந்தவிதமான தாக்குதல் முயற்சியையும் முறியடிக்க பாதுகாப்பு படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

.

மூலக்கதை