காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை பொதுமக்களுக்கு எதிராக உள்ளது காங்கிரஸ் கண்டனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீரில் ராணுவ நடவடிக்கை பொதுமக்களுக்கு எதிராக உள்ளது காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு (பிடிபி) ஆதரவு அளித்து வந்த பாஜ, தனது ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதால், தற்போது அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், அங்கு புதிய அரசு அமைப்பதற்கான வாய்ப்பும் இல்லை.

அதனால், சட்டசபையை கலைத்துவிட்டு மாநிலத்தில் புதியதாக தேர்தல் நடத்த வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான குலாம்நபி ஆசாத், அம்மாநிலத்தின் நிலவரம் குறித்து கூறிய கருத்துகள் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ நடவடிக்கையினால் தீவிரவாதிகளை விட பொதுமக்களே அதிகளவு பலியாகி உள்ளனர். இதற்கு பாஜ கட்சி முழு பொறுப்பேற்க வேண்டும்.

நான்கு தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறி, 20 பொதுமக்களை கொல்கின்றனர். இது, மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை.

கடந்த சில நாட்களுக்கு முன், பல்வாமா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு தீவிரவாதி, 13 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு, பாஜ செய்தி தொடர்பாளரும், ராஜ்ய சபா எம்பியுமான அனில் பாலுனி கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவர்கள் கீழ்தரமான கருத்துகளை ராணுவத்திற்கு எதிராக கூறிவருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத் கூறிய கருத்துகளுக்கு, காங்கிரஸ் கட்சி விளக்கம் ெதரிவிக்க வேண்டும்.

அடிப்படை ஆதாரமின்றி கருத்துகளை கூறிய ஆசாத் மீது, ராகுல் காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றார்.


.

மூலக்கதை