துனிசியாவை சேர்ந்தவர் கைது ரிசின் விஷ தாக்குதலை முறியடித்தது ஜெர்மனி

தினகரன்  தினகரன்
துனிசியாவை சேர்ந்தவர் கைது ரிசின் விஷ தாக்குதலை முறியடித்தது ஜெர்மனி

பெர்லின்: ஆமணக்கு விதைப்பொடி மூலம் வெடிகுண்டு தயாரித்து கொடூரமான விஷ தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த துனிசியாவை சேர்ந்தவரை ஜெர்மன் போலீசார் கைது செய்துள்ளனர். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள மேற்கத்திய நாடுகளில் ரசாயன வெடி பொருட்கள் கொள்முதல் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இதனால் தீவிரவாதிகளால் வெடிகுண்டு தாக்குதல் நடத்த முடியவில்லை. இதையடுத்து, உயிரி குண்டு (பயோபாம்) மூலம் தாக்குதல் நடத்தும் திட்டம் பற்றி தங்கள் ஆதரவாளர்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பயிற்சி அளிப்பதாக கூறப்படுகிறது. உயிரி வெடிகுண்டு தயாரிக்க, பதப்படுத்தபட்ட ஆமணக்கு விதைப் பொடி முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது சயனைடு விஷத்தை விட 6 ஆயிரம் மடங்கு விஷத்தை கொண்டது.பிரான்சில் இதுபோன்ற உயிரி வெடிகுண்டு தயாரிக்க முயன்ற எகிப்து நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஆமணக்கு விதைகளை ஆன்லைன் மூலம் வாங்குபவர்களை அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ தீவிரமாக கண்காணித்து வருகிறது. துனிசியாவில் இருந்து ஜெர்மனியில் குடியேறிய சைப் அல்லா என்பவர் ஆயிரம் ஆமணக்கு விதைகளையும், காப்பி கொட்டை அரைக்கும் இயந்திரத்தையும் ஆன்லைன் மூலம் சமீபத்தில் வாங்கியுள்ளார். இதை கண்டுபிடித்த அமெரிக்க உளவுத்துறை, ஜெர்மன் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். உடனே, பெர்லின் போலீசார் சைப் அல்லா தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினர். அங்கு ஆமணக்கு விதைகள், காப்பி கொட்டை கிரைண்டர், வெடிகுண்டு தயாரிக்கும் உபகரணங்கள் இருந்தன. இதையடுத்து, அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என சந்தேகிக்கப்படுகிறது. இவரை தகுந்த நேரத்தில் கைது செய்ததின் மூலம், மிகவும் கொடூரமான உயிரி குண்டு தாக்குதலை ஜெர்மனி முறியடித்துள்ளது. கொடூர விஷமாகும் விளக்கெண்ணெய் மிகவும் சாதாரணமாக கிடைக்கக் கூடிய ஆமணக்கு விதைகளை அரைத்து விளக்கெண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதை ஒரு சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பதப்படுத்துவதன் மூலம், ரிசின் விஷம் தயாரிக்கப்படுகிறது. இதை பல ஆண்டுகளாக பல்வேறு நாடுகளை சேர்ந்த உளவுத்துறைகள், தங்களின் எதிரிகளை தீர்த்துக் கட்ட பயன்படுத்தி வருகின்றன. பல்கேரியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஜியார்ஜி மார்கோவ் என்பவர், ஒரு குடையின் நுனியில் பொருத்தப்பட்ட ஊசியில்  ரிசின் விஷத்தை தடவி அவரை எதேச்சையாக குத்துவது போல் குத்தி 1978ல் கொலை செய்தார்.அப்போதுதான், ரிஷின் பற்றிய ரகசியம் முதன் முதலில் வெளியே தெரிந்தது. இந்த விஷத்தை சாப்பாட்டிலோ, தண்ணீரிலோ, ஆவியாகவோ தெளிக்கலாம். இது உடனே உடைந்து உடலில் கலந்துவிடும். இதை கண்டறிவது கடினம். முதலில் காய்ச்சல் வரும். அடுத்து மரணம் நிகழும். இதற்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த 2013ல் அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமாவுக்கும், நியூயார்க் மேயருக்கும் இந்த கொடிய விஷம் தடவிய கடிதத்தை டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த டிவி நடிகையான ஷான்  ரிச்சர்ட்சன் (35)  அனுப்பி கொல்ல முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை