ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறியது அமெரிக்கா : வெட்கம் இல்லாமல் நடிப்பதாக கண்டனம்

தினகரன்  தினகரன்
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறியது அமெரிக்கா : வெட்கம் இல்லாமல் நடிப்பதாக கண்டனம்

வாஷிங்டன்: ‘தவறு செய்பவர்களை அமைதியாக விட்டுவிட்டு, எந்த குற்றமும் செய்யாதவர்களை கண்டிக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் வெட்கம் இல்லாமல் கபட நாடகமாடுகிறது. இது போன்ற அமைப்பின் அறிவுரைகளை அமெரிக்கா ஏற்காது’ என கருத்து தெரிவித்த அமெரிக்கா, ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறியது. ஜெருசலம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரித்தது. தனது தூதரகத்தையும் ்அந்த நகருக்கு மாற்றியது. இதற்கு கண்டனம் தெரிவித்து காசா எல்லையில் பாலஸ்தீனர்கள் போராட்டம் நடத்தி கல்வீச்சு மற்றும் தீ வைப்பு, ஏவுகணைகளை வீசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி  அவர்களை கொன்று வருகிறது. இதில் பலர் பலியாவது தொடர்ந்து நடக்கிறது.  இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் இறக்கும் போதெல்லாம் ஐ.நா மனித உரிமை கவுன்சில் கண்டனம் தெரிவித்து வந்தது. ஆனால், வன்முறையில் ஈடுபடும் பாலஸ்தீனர்களுக்கு எதிராக எந்த கருத்தும் ஐ.நா மனித உரிமை கவுன்சில் தெரிவிப்பதில்லை. இது இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. இதனால், ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. இது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலே கூறியிருப்பதாவது:தவறு செய்பவர்களை ஐ.நா மனித உரிமை கவுன்சில் அமைதியாக விட்டு விடுகிறது. தவறு செய்யாதவர்களை கண்டிக்கிறது. இஸ்ரேல் மீது எப்போதும் விரோதபோக்கை கடைபிடிக்கிறது. இது வெட்கம் கெட்ட கபட நாடகம். மனித உரிமையை தவறாக பயன்படுத்துபவர்கள்தான், ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தொடர்ந்து இடம் பெறுகின்றனர். உலகிலேயே மிக மோசமாக மனிதத்தன்மை இல்லாமல் நடந்து கொள்ளும் ஆட்சியாளர்கள் எல்லாம் ஆய்வுக்கு உட்படாமல் தொடர்ந்து தப்புகின்றனர். மனித உரிமையை மீறுபவர்களிடமிருந்து மற்றவரின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியாக, ஐ.நா மனித உரிமை கவுன்சில் தொடர்ந்து அரசியல் செய்கிறது. இதன் மூலம் மனித உரிமை மீறல் குற்றம் உள்ள நாடுகளை, ஐ.நா கவுன்சில் தப்பவிடுகிறது. நாங்கள் ஏற்கனவே சொன்னது போல், கடந்த ஒராண்டாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால், ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்த அமெரிக்கா வெளியேறுகிறது. இது மனித உரிமை கடமைகளில் இருந்து பின்வாங்கும் செயல் அல்ல. மனித உரிமைகளை கேலிகூத்தாக்கும் கபட நாடக அமைப்பில் நீடிக்க, எங்களின் உறுதிப்பாடு அனுமதிக்கவில்லை. இஸ்ரேல் மீது அளவுக்கு அதிகமாக கவனம் செலுத்தி, ஐ.நா மனித உரிமை கவுன்சில் வெறுப்பை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறுகையில், ‘‘மனித உரிமைகளை மிக மோசமாக மீறும் சீனா, கியூபா, வெனிசுலா போன்ற சர்வாதிகார நாட்டைச் சேர்ந்தவர்கள் எல்லாம் ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இடம் பெற்றுள்ளனர். வெட்கமே இல்லாமல் கபட நாடகத்தை ஐ.நா மனித உரிமை கவுன்சில் நடத்துகிறது’’ என்றார்.

மூலக்கதை