கட்சித் தாவலில் ஈடுபடும் எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பாஜக பொதுநல வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கட்சித் தாவலில் ஈடுபடும் எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பாஜக பொதுநல வழக்கு

புதுடெல்லி: கட்சித் தாவலில் ஈடுபடும் எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக தரப்பில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது: கட்சித் தாவலில் ஈடுபடும் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சட்டப் பேரவைத் தலைவருக்கு மட்டுமே உள்ளது.

இதேபோல், கட்சித் தாவலில் ஈடுபடும் எம்பிக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் மக்களவை உறுப்பினராக இருந்தால் லோக்சபா சபாநாயகருக்கும், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தால் துணை ஜனாதிபதிக்கும் உள்ளது.

 அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள இந்த சரத்துக்களால் பல மாநிலங்களில் கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், இந்த நடவடிக்கைகள் நீதிமன்றங்களின் ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.

சில நேரங்களில் ஒருதலைப் பட்சமாக பேரவைத் தலைவரோ அல்லது மக்களவை சபாநாயகரோ முடிவெடுக்கும் நிலையும் உள்ளது. இதனால், தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படுகின்றன.

எனவே, கட்சித் தாவலில் ஈடுபடும் எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை ஆளுநர் மற்றும் ஜனாதிபதிக்கு தந்தால் அந்த முடிவில் மாற்றம் ஏற்படாது. எனவே, இது குறித்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

.

மூலக்கதை