திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட உளறல் அமைச்சர்களை பதவியில் இருந்து தூக்குங்கள் எடப்பாடிக்கு கட்சி நிர்வாகிகள் கோரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட உளறல் அமைச்சர்களை பதவியில் இருந்து தூக்குங்கள் எடப்பாடிக்கு கட்சி நிர்வாகிகள் கோரிக்கை

சென்னை: திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட உளறல் அமைச்சர்களை நீக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள் யாரும் வாய் திறந்து பேச மாட்டார்கள்.

கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமைச்சர்களிடம் அந்த துறை சம்பந்தமான முக்கிய பிரச்னைகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினால் பதில் கூறாமல் அமைதியாக சென்று விடுவார்கள். அதையும் மீறி அமைச்சர்கள் பதில் அளித்தால், அவர்களை ஜெயலலிதா அமைச்சர் பதவியில் இருந்தே தூக்கி விடுவார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நிலைமை தலைகீழாகி உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமைச்சர்கள் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி அளித்து வருகிறார்கள். இதில் ஒரு சில அமைச்சர்கள், தினசரி சென்னையில் உள்ள தங்களது வீட்டுக்கு தொலைக்காட்சி நிருபர்களை அவர்களாகவே வரச்சொல்லி பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

இதன்மூலம் அதிமுக கட்சியில் தான் பெரிய ஆளாக உள்ளேன் என்பதை காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள். இப்படி பேட்டி அளிக்கும்போதும் சரி, பொதுக்கூட்டங்களில் பேசும்போது சரி அமைச்சர்கள் என்ன சொல்கிறோம் என்றே தெரியாமல் தங்கள் இஷ்டத்துக்கு நடந்து கொள்வது அதிமுக தொண்டர்களையே முகம் சுழிக்கும் அளவுக்கு சம்பவங்கள் சமீப காலமாக நடந்து வருகிறது.

குறிப்பாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டங்களில் பேசும்போது தனது சொந்த கட்சி பற்றியே பல இடங்களில் தவறாக பேசி வருகிறார். நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு அண்ணா திடலில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, “ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டி. டி. வி. தினகரன் மூலம் பெற்று கொண்டு அந்த பணத்தல், வெற்றிபெற்ற 18 எம்எல்ஏக்கள் அதிமுகவிற்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று பேசியுள்ளார். ஒரு அமைச்சரே அதுவும் தமிழக அமைச்சரவையில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மூத்த அமைச்சர் ஒருவரே, அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று கூறப்படும் ஜெயலலிதாவை பற்றி இப்படி பேசி இருப்பது அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இதுபோன்று பேசுவது இது முதல்முறை கிடையாது. ஏற்கனவே மதுரை பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்று நாங்கள் சொன்னதெல்லாம் பொய்” என்று கூறினார்.

அதேபோன்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பாரத பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பேசினார் என்று கூறினார். இப்படி தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உலறி வருகிறார். அதேபோன்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜும் தமிழகத்தின் நீர்நிலைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக வைகை அணையில் தெர்மாகோல் போட்டு புரட்சியை ஏற்படுத்தினார்.

இதுவும் தமிழக மக்களிடம் இன்றும் கிண்டலாக பேசப்பட்டு வருகிறது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் தினசரி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும்போது, தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை கிண்டலாக பேசி மக்களின் வெறுப்புக்கு ஆளாகி உள்ளார்.

இதுபோன்ற அமைச்சர்களால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இதுபோன்ற உலறல் அமைச்சர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்க வேண்டும் என்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுக கட்சி கட்டுக்கோப்பாக இருந்தது. தற்போது, அமைச்சர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை கூறுகிறேன் என்ற போர்வையில் சொந்த கட்சியை பற்றியும், கட்சியின் தலைமை பற்றியும் தவறாக பேசி வருகிறார்கள்.

இது அதிமுகவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதுடன், அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது. எனவே ஜெயலலிதாவை போல் தற்போதைய முதல்வர் எடப்பாடியும் இதுபோன்ற உளறல் அமைச்சர்களை பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று நாங்கள் கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

அப்படி தூக்காவிட்டால் தொடர்ந்து ஆட்சிக்கும், கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது” என்றார். அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகளே, திண்டுக்கல் சீனிவாசன் போன்ற உளறல் அமைச்சர்களை பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை