பெற்றோரிடம் இருந்து 2000 குழந்தைகள் பிரிப்பு: டிரம்ப் நடவடிக்கைக்குமனைவி கடும் எதிர்ப்பு: ‘இதயமுள்ள நாடாக இருக்க வேண்டும்’

தினகரன்  தினகரன்
பெற்றோரிடம் இருந்து 2000 குழந்தைகள் பிரிப்பு: டிரம்ப் நடவடிக்கைக்குமனைவி கடும் எதிர்ப்பு: ‘இதயமுள்ள நாடாக இருக்க வேண்டும்’

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களையும், அவர்களின் குழந்தைகளையும் பிரிக்கும் அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கைக்கு  மனைவியே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து குடியேற்ற கொள்கையில் அவர் அதிரடி  மாற்றங்களை செய்துள்ளார். இதன்படி, பிற நாடுகளில் இருந்து எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்கள் மீது கடுமையான  குற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு எல்லைக்குள் நுழையும் பெரியவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள்  பதிவு செய்யப்படுகிறது. அவர்களின் பிள்ளைகள், குழந்தைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது கிடையாது. இவர்கள் எல்லையிலேயே பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு, பாதுகாப்பு இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் மே  31ம் தேதி வரையில் இவ்வாறு 2 ஆயிரம் குழந்தைகள் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெட்டி போன்ற அறைகளில் அடைக்கப்பட்ட புகைப்படங்கள்  சமீபத்தில் வெளியானதால் டிரம்ப் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த செயலுக்கு டிரம்ப்பின் மனைவி மெலனியா கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளார். மெலனியா உத்தரவுப்படி, அவருடைய தகவல் தொடர்பாளர் ஸ்டெபனியா கிரிஷம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தனது  குடும்பத்திடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்படுவதை மெலனியா வெறுக்கிறார். அமெரிக்கா எல்லா சட்டங்களையும் மதிக்கக் கூடிய நாடாக இருக்க வேண்டும்தான். அதே நேரம், இதயத்துடன் ஆட்சி நடத்தும் நாடாகாவும் இருக்க  வேண்டும் என்று அவர் கருதுகிறார். அமெரிக்காவின் குடியேற்ற கொள்கை முழு வெற்றியை பெற வேண்டும் என்றால், பிரிக்கப்பட்ட பெற்றோர்களும்  குழந்தைகளும் ஒன்று சேர வேண்டும்’ என்று கூறியுள்ளார். இப்போது 48 வயதாகும் மெலனியாவும், ஒரு காலத்தில் சுலவேனியாவில் பிறந்து  அமெரிக்கா வந்து குடியேறியவர்தான். முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி லாரா புஷ்சும் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம்  தெரிவித்துள்ளார்.

மூலக்கதை