அணியின் வெற்றியை துள்ளிக்குதித்து கொண்டாடிய ரசிகர்கள்...... லேசாக ஆட்டம் கண்ட மெக்சிகோ சிட்டி

தினகரன்  தினகரன்
அணியின் வெற்றியை துள்ளிக்குதித்து கொண்டாடிய ரசிகர்கள்...... லேசாக ஆட்டம் கண்ட மெக்சிகோ சிட்டி

மெக்சிகோ: கால்பந்துப்போட்டியில்  ஒரு அணி கோல் அடித்தாலோ வெற்றி பெற்றாலோ ரசிகர்கள் அதை உற்சாகமாக கொண்டாடுவது வழக்கமான ஒன்று. ஆனால் தற்போது ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணியை மெக்சிகோ அணி வீழ்த்திய நிலையில் அந்த வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பூமி அதிர கொண்டாடி வியக்கவைத்துள்ளனர். போட்டியின் 35-வது நிமிடத்தில் மெக்சிகோ அணி வீரர் லோசனோ ஒரு கோல் அடித்தார். அதே சமயத்தில் லேசான நில அதிர்வை தங்கள் கருவிகள் மூலமாக பதிவுசெய்திருப்பதாக மெக்சிகோவில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது. தலைநகர் மெக்சிகோ சிட்டியில் 2 இடங்களில் நில அதிர்வு பதிவானதாக நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது. ரசிகர்கள் துள்ளிக்குதித்த போது இந்த அதிர்வு பதிவாகி இருக்கலாம் என்றும் இதனை செயற்கையான பூமி அதிர்வாக கருதமுடியும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது. பூமி அதிர கொண்டாடியது கால்பந்து விளையாட்டின் மீது மக்களுக்கு இருக்கும் மோகம் புதிய உச்சத்தை எட்டியிருப்பதை காட்டுகிறது.

மூலக்கதை