அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவரை கொன்றவர் குற்றவாளியாக அறிவிப்பு: 60 ஆண்டு வரை சிறை கிடைக்கும்

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய மாணவரை கொன்றவரை அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து தீர்ப்பளித்தது. அவருக்கு 20 முதல் 60 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.  அமெரிக்காவில் உள்ள தெற்கு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவர் பிரவீன் வர்கேசி. இவர் கடந்த 2014ம் ஆண்டு காணாமல் போனார். 5 நாள் கழித்து இவரின் உடல் ஒரு காட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதை விசாரித்த கார்பன்டேல் பகுதி போலீசார் இது ஒரு சோக சம்பவம். சுற்றுச்சூழல் வெப்ப குறைபாடு காரணமாக பிரவீன் இறந்துள்ளதாக வழக்கை முடித்தனர். ஆனால், மார்டன் கிரோவ் பகுதியில் வசித்த அவனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மேல் விசாரணைக்கு வலியுறுத்தினர். உடல் பிரதே பரிசோதனையில் உடலில் காயங்கள் இருந்தது கண்டறிப்பட்டது. இது போலீசார் தெரிவித்த தகவலுக்கு முரண்பாடாக இருந்தது. இதனால் பிரவீன் குடும்பத்தார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். போலீசார் அறிக்கையும், பிரதே பரிசோதனை அறிக்கையும் முரண்பாடாக இருந்ததால், கார்பன்டேல் போலீஸ் உயர் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார். மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில் பிரவீன் வர்கேசி கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி இரவு அமெரிக்க மாணவர் காகே பெதுன்(19) என்பவருடன் ஒரு பார்ட்டிக்கு சென்றது தெரிந்தது. காகே பெதுன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘‘கொகைன் போதைப் பொருள் வாங்க சென்றபோது, பணம் கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அதனால் பிரவீனை தலையிலும், முகத்திலும் தாக்கினேன். இதனால், தப்பித்து காட்டுக்குள் ஓடியவன் அங்கு விழுந்து இறந்தான்’’ என தெரிவித்தான்.  இந்த வழக்கை 12 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த வாரம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இதில் காகே பொதுனை நீதிபதிகள் குற்றவாளியாக அறிவித்தனர். அவருக்கான தண்டனை அறிவிக்கப்படவில்லை. ஆனால், கொலை குற்றத்துக்கு 20 முதல் 60 ஆண்டு காலம் சிறை தண்டனை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மூலக்கதை