குப்பை கிடங்காக மாறும் எவரெஸ்ட் சிகரம்

தினமலர்  தினமலர்
குப்பை கிடங்காக மாறும் எவரெஸ்ட் சிகரம்

காத்மாண்டு:எவரெஸ்ட் சிகரத்தில், மலை ஏறுவோர் விட்டு செல்லும் குப்பையால், உலகின் உயரமான குப்பை கிடங்காக, அந்த சிகரம் மாறியுள்ளது.

இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரம், 29,029 அடி உயரம் உடையது. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதை கவுரவமாக கருதும் மலையேற்ற வீரர்கள், ஆண்டுதோறும், அதில் ஏறி வருகின்றனர்.

கழிவுகள்


நீண்ட காலமாக, எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்றம் நடந்து வருவதால், வீரர்கள் விட்டு செல்லும் குப்பை அதிகளவில் குவிந்துள்ளது. இதனால், உலகின் உயரமான குப்பை கிடங்காக, எவரெஸ்ட் சிகரம் மாறியுள்ளதாக, ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

எவரெஸ்ட் சிகரத்தின் மலையேற்ற பாதையில், மலை ஏற உதவும் சாதனங்கள், காலி, 'காஸ்' சிலிண்டர்கள், மனித கழிவுகள் அதிகளவில் காணப்படுவதாக, அவர்கள் கூறிஉள்ளனர்.
எவரெஸ்ட் சிகரத்தை, 18 முறை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ள, பெம்பா தோர்ஜி ஷெர்பா கூறுகையில், ''எவரெஸ்ட் சிகரத்தில் குப்பைகள் தேங்கி கிடப்பது அருவருப்பாக உள்ளது. டன் கணக்கில், கழிவுகள் தேங்கி கிடக்கின்றன,'' என்றார்.

அபராதம்


எவரெஸ்ட் சிகரத்தை, 65 ஆண்டுகளுக்கு முன், எட்மண்ட் ஹிலாரி, டென்ஸிங் நார்கே ஆகியோர், முதல் முறையாக ஏறி சாதனை படைத்தனர். அதன் பின், ஏராளமானோர் எவரெஸ்டில் ஏறி, சாதனை படைத்துள்ளனர்.எவரெஸ்டில் குப்பை சேர்வதை தடுக்க, நேபாள அரசு, பல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

எவரெஸ்டில் மலை ஏறும் ஒவ்வொரு குழுவினரும், குப்பை போடுவதற்கு அபராதமாக, 2.5 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்ய வேண்டும் என்றும், திரும்பி வரும்போது, அந்த குப்பையை எடுத்து வந்தால், அந்த தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும், நேபாள அரசு அறிவித்தது. இமயமலையின் மற்றொரு பகுதியில் உள்ள திபெத்தும், இதே போன்ற அபராத திட்டத்தை அறிவித்து உள்ளது. இருப்பினும், எவரெஸ்டில் குப்பை தேங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மூலக்கதை