ரேஷன் பொருள் வினியோகத்தில் முறைகேடுக்கு முற்றுபுள்ளி ! விரைவில் 'பயோமெட்ரிக்' பதிவு முறை

தினமலர்  தினமலர்
ரேஷன் பொருள் வினியோகத்தில் முறைகேடுக்கு முற்றுபுள்ளி ! விரைவில் பயோமெட்ரிக் பதிவு முறை

திருப்பூர்:'ரேஷன் பொருள் வினியோகத்தில் முறைகேடுகளை களைய,விரைவில் 'பயோ மெட்ரிக்' பதிவு முறை அமலுக்கு வரவுள்ளது' என, உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.திருப்பூரில், உள்ளூர்வாசிகளுக்கு இணையாக, வெளியூர்வாசிகளும் வசிக்கின்றனர். பிற மாவட்ட, வெளி மாநில தொழிலாளர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்கள், தங்கள் சொந்த ஊரிலும், திருப்பூரிலும், தனித்தனியாக ரேஷன் கார்டுகளை வாங்கி வைத்திருந்தனர்.
பொது வினியோக திட்டத்தில், ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்ட பின், போலி ரேஷன் கார்டுகள் களையெடுக்கப்பட்டன. மாவட்டத்தில் மட்டும், 60 ஆயிரத்துக்கும் அதிகமான போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன.மாவட்ட அளவில், 7.20 லட்சத்துக்கும் அதிகமான 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அதிகபட்சமாக, திருப்பூர் வடக்கு, தெற்கு தாலுகாக்களில் மட்டும், 1.15 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.ஆதார் விவரங்களை இணைத்து, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதால், குடும்ப உறுப்பினர்களின் விவரம் தெளிவாக தெரிய வருகிறது. ஒரு நபர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், 'ஸ்மார்ட்' கார்டுகளை வைத்திருக்க முடியாது.
ரேஷன் கடைகளுக்கும், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ள நிலையில் பதிவேடுகளில் விவரங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை; ரசீது வழங்கும் பணியும் இல்லை.ரேஷன் பொருட்களை வாங்கியவுடன், ரேஷன் கார்டுதாரர்களின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., சென்று விடுவதால், முறைகேடு பெரும்பாலும் குறைந்துவிட்டது.மேலும், குடோனில் இருந்து பொருட்களை எடுப்பது, கடைகளின் விற்பனை மற்றும் இருப்பு விவரம் என அனைத்து விவரங்களும் 'ஆன்லைன்' மூலம் கண்காணிக்கப்படுகிறது. தாலுகா அளவில் மட்டுமல்லாமல், மாவட்ட, மாநில அளவிலும், ரேஷன் பொருள் வினியோகம் கண்காணிக்கப்படுகிறது.
இருப்பினும், 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், சில நேரங்களில் 'சர்வர்' கோளாறால் பிரச்னை ஏற்படுகிறது. 'ஸ்மார்ட்' கார்டுகளை, மற்ற நபர்கள் எடுத்து வந்து, பொருட்கள் பெற்றுக் கொள்வதும் நடக்கிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, 'பயோமெட்ரிக்' தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி, ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சென்று, பயோமெட்ரிக் கருவியில், கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே, ரேஷன் பொருட்களை பெற முடியும்.இதனால், ஒரு குடும்பத்துக்கான ஒதுக்கீட்டை, மற்றவர்கள் பெறுவது தவிர்க்கப்படும். இதுகுறித்து, குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'பயோமெட்ரிக்' கருவி வாங்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பயோ மெட்ரிக் கருவியை பயன்படுத்துவது தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில், ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிமுக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில், இத்திட்டம் வெள்ளோட்ட அடிப்படையில் நடைமுறைக்கு வரும்' என்றனர்.

மூலக்கதை