நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எடப்பாடி பழனிசாமி பேச்சு

PARIS TAMIL  PARIS TAMIL
நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எடப்பாடி பழனிசாமி பேச்சு

நிதி ஆயோக் அமைப்பின் 4-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி தலைமை தாங்கினார். இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 24-ந்தேதி அன்று ‘தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023’ யை பிரகடனம் செய்தார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மென்மேலும் பன்மடங்கு உயர்த்திக் காட்டும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள், இலக்குகளை உள்ளடக்கி, தொலைநோக்கு திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வாழ்க்கையில் வளர்ச்சியை எட்டும் விதத்தில், சிறந்த நிர்வாகத்தை உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட திட்டமாகும்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் கலாசார ரீதியிலும், சமூக ரீதியிலும் மாறுபட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் வளர்ச்சிக்கு வெவ்வேறு விதமான தேவைகள் உள்ளன. ஆகவே பல்வேறு மாநிலங்களின் வளர்ச்சித் தேவைகளை கருத்தில் கொண்டு ஒட்டுமொத்தமாக ‘இந்தியாவின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் 2022’ என்னும் பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்து அதனை வெற்றிகரமாக அமல்படுத்த வேண்டும். இது இன்றைய ஆற்றல்மிகு பிரதமரான உங்களால் (மோடி) நிச்சயம் முடியும்.

முதலில் விவசாய உற்பத்தியும், உற்பத்தித் திறனும் மேம்படுத்தப்பட வேண்டும். சிறந்த நீர்பாசன நிர்வாக நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும். தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை மற்றும் மீன்வளம் ஆகியவற்றை உள்ளடக்கிய விவசாயத்தில் திடீர் பொருளாதார தடைகள் மற்றும் இயற்கை பேரிடர் அதிர்ச்சிகள், விவசாயிகளை பாதிக்காமல் இருக்க செயல்படுத்தக்கூடிய விரிவான சமூக பாதுகாப்பு திட்டத்துக்கு வழி காணப்பட வேண்டும்.

விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக்குவது எப்படி என்பதற்கான வழி வகைகளை கண்டறியும் விதத்தில் இன்றைய கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மின்னணு நிர்வாக தேசிய விவசாய சந்தை உருவாக்கப்பட வேண்டும். அதேபோன்று மண் வளம், ஆரோக்கிய அட்டைகள் வழங்கப்பட வேண்டும். பின்தங்கிய, முற்பட்ட விற்பனைச் சந்தை இணைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். பாசனத்துக்கு தண்ணீர் பராமரிப்பு, பயன்பாட்டில் சிறந்த நிர்வாகம் நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கும் 30 ஒழுங்குபடுத்தப்பட்ட விற்பனை சந்தைகளை மேலும் வலிமைப்படுத்த உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்துதர இந்த திட்டத்தில் நிலுவையில் இருக்கும் ரூ.13 கோடியே 50 லட்சத்தை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிந்தனையில் உதித்த ‘மண்வள ஆரோக்கியம் அட்டை’ திட்டம், 2011-2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை தமிழகத்தில் 100 கிராமங்களில் முன்னோடி திட்டமாக செயல்படுத்த திட்டமிட்டு இருக்கிறோம். நடப்பு ஆண்டில் மண்வள அட்டை அடிப்படையிலான சிபாரிசுகளின் பலன்களை விவசாயிகளுக்கு எடுத்துக்காட்ட 4 ஆயிரத்து 270 செயல்முறை விளக்க கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். விவசாயிகள் மத்தியில் இந்த மண் சோதனை வசதிகளை கொண்டு சேர்த்தால் மட்டுமே இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்ய முடியும். இந்த மண்சோதனை வசதிகளை அவர்கள் முறைப்படி பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

பெரிய நகர்ப்புற பகுதிகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை கொள்முதல் செய்து தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதியை செய்து தர வேண்டும். விவசாயிகளுக்கான கூட்டுறவு விற்பனை சந்தையை மாநில அரசுகள் உருவாக்கிட அவற்றுக்கு மத்திய அரசு உரிய ஆதரவு அளிக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் இடைத்தரகர்களை ஒழிக்க முடியும். சிறிய விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை நேரடியாக விற்று, நகர்ப்பகுதிகளில் அவற்றுக்கு சிறந்த விலை கிடைக்க இதன் மூலம் வழி காணப்படும்.

2016-2017-ம் ஆண்டுக்கு அரசு ரூ.100 கோடியை குடிமராமத்து பணிகளுக்காக ஒதுக்கீடு செய்தது. 30 மாவட்டங்களில் 1,519 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டில் சீரமைப்புக்கு ரூ.329 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். நடப்பு நிதியாண்டில் மாநிலத்தின் 985 சுகாதார மையங்களை சுகாதார மற்றும் நலம் காண மையங்களாக ரூ.82 கோடி செலவில் மத்திய அரசின் உதவியுடன் மாற்றி அமைக்க திட்டமிட்டிருக்கிறோம்.

2018-2019-ம் ஆண்டில் விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரியை மத்திய பிரிவின் திட்டத்தின் கீழ் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்விரு மாவட்டங்களும் சமூக ரீதியில், பொருளாதார ரீதியில் பின்தங்கியவையாகும்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை தமிழக விவசாயிகள் நலன் கருதி முழுமையாக செயல்படுத்த வேண்டும். காவிரி ஆணையம் தனது பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பின்பற்றப்பட வேண்டும். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு நதிகளை மத்திய அரசு இணைக்கவேண்டும். நதிகள் இணைப்பு திட்டத்தின் மூலம் உபரி நீர் வீணாவதை தடுக்க முடியும்.

மேற்கு நோக்கி பாயும் பம்பா, அச்சன்கோவில் நதிகளின் உபரி நீரை தமிழ்நாட்டில் உள்ள வைப்பாறுக்கு திருப்பி விட வேண்டும்.

மத்திய அரசின் வரிக் கொள்கையை மாற்றம் செய்யப்பட வேண்டும். தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை பங்கிடுவதில் மத்திய அரசு போதுமான அளவு தமிழகத்துக்கு உதவ வேண்டும்.

மாநிலங்கள் பாதிக்காத வகையில் 15-வது நிதிக் குழுவில் உள்ள விதிகளில் திருத்தமும் தேவைப்படுகிறது. நிதி இழப்பை தவிர்க்க 2011-ம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாக கொள்ள கூடாது. 14-வது நிதி கமிஷன் பரிந்துரையால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கான நிலுவை தொகை ரூ.1,804 கோடியையும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு தமிழகத்துக்கான எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
 

மூலக்கதை