நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை பிரதமர் பேச்சு

PARIS TAMIL  PARIS TAMIL
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை பிரதமர் பேச்சு

திட்டக்குழுவுக்கு பதிலாக மத்திய பா.ஜனதா அரசு ஏற்படுத்திய நிதி ஆயோக் அமைப்பின் 4-வது ஆட்சி மன்றக்குழு கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நேற்று நடந்தது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச துணை நிலை கவர்னர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் மற்றும் அரசின் முக்கிய திட்டங்களான ‘ஆயுஷ்மான் பாரத்’, ‘தேசிய ஊட்டச்சத்து திட்டம்’, ‘இந்திரதனுஷ்’ போன்ற திட்டங்கள் குறித்தும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை கொண்டாடுவது பற்றியும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. அத்துடன் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்த இந்த குழுவினர், ‘புதிய இந்தியா 2022’-க்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டின் வளர்ச்சியில் வரலாற்று சிறப்பு மிக்க மாற்றங்களை ஏற்படுத்தும் தளமாக இந்த ஆட்சிமன்றக்குழு விளங்கி வருகிறது. நிர்வாக ரீதியான சிக்கலான பிரச்சினைகளை, ‘குழு இந்தியாவாக’ கூட்டுறவு, போட்டி கூட்டாட்சி தத்துவத்தின் வலிமையில் இந்த குழு அணுகுகிறது.

ஜி.எஸ்.டி.யின் தெளிவான அமலாக்கத்தை இதற்கு முதன்மை உதாரணமாக கூறலாம். அப்படி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.

2017-18-ம் ஆண்டின் 4-வது காலாண்டில் இந்திய பொருளாதாரம் ஆரோக்கியமான வளர்ச்சியாக 7.7 சதவீதத்தை கொண்டிருந்தது. இந்த வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கமாக மாற்றுவதே அரசின் முன் தற்போது இருக்கும் சவால் ஆகும்.

இதற்கு பல்வேறு முக்கியமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டி உள்ளது. அதை அரசு நிச்சயம் மேற்கொள்ளும். ஏனெனில் 2020-க்குள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு இந்த நடவடிக்கைகள் மிகவும் அத்தியாவசிய தேவை ஆகும்.

தூய்மை இந்தியா திட்டம், டிஜிட்டல் பரிமாற்றங்கள் மற்றும் திறன் மேம்பாடு போன்ற விவகாரங்களில் கொள்கை முடிவுகளை வகுப்பதற்கு, துணை குழுக்கள் மற்றும் கமிட்டிகள் வாயிலாக முதல்-மந்திரிகள் முக்கிய பங்காற்றினர். இந்த குழுக்களின் பரிந்துரைகளை மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் இணைத்துக்கொண்டு உள்ளன.

ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் மதிப்பில் 10 கோடி குடும்பங்களுக்கு சுகாதார வசதி மேற்கொள்ளப்படும். ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் 1½ லட்சம் சுகாதார மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் கல்விக்காக விரிவான அணுகுமுறை உருவாக்கப்படுகிறது.

‘முத்ரா யோஜனா’, ‘ஜன்தன் யோஜனா’ மற்றும் ‘ஸ்டான்ட் அப் இந்தியா’ போன்ற திட்டங்கள் அதிக அளவிலான நிதி உள்ளடுகளை பெற்றுள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வை களைவதற்கு இது கட்டாய தேவையாகும்.

எதிர்பார்க்கிற 115 மாவட்டங்களில் மனித வளர்ச்சியின் அனைத்து அம்சங்கள் மற்றும் தேவைகளை சந்தித்து மேம்படுத்த வேண்டும். திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஒரு புதிய மாதிரியை கிராம ஸ்வராஜ் அபியான் திட்டம் வழங்கி இருக்கிறது. இந்த திட்டம் எதிர்பார்க்கிற மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 ஆயிரம் கிராமங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

உஜ்வாலா, சவுபாக்யா, உஜலாலா, ஜன்தன், ஜீவன் ஜோதி யோஜனா, சுரக்‌ஷா பிமா யோஜனா மற்றும் இந்திரதனுஷ் திட்டம் போன்ற 7 திட்டங்களுக்கு உலகளாவிய பாதுகாப்பு பெறுவதே இலக்கு ஆகும்.

இந்தியாவில் திறமை மற்றும் வளத்துக்கு பஞ்சமே இல்லை. நடப்பு நிதியாண்டில் மத்திய அரசிடம் இருந்து மாநிலங்கள் ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் பெற்றுள்ளன. இது முந்தைய அரசில் கடைசி ஆண்டு பெற்றுக்கொண்டதை விட ரூ.6 லட்சம் கோடி அதிகமாகும்.

தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மாநிலங்களில் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் அந்தந்த மாநில முதல்-மந்திரிகளுக்கு மத்திய அரசு வழங்கும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மேலும் நாடு முழுவதும் தற்போது விவாதப்பொருளாகி இருக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விவகாரத்துக்கு பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் ஆதரவளித்ததாக மத்திய அரசு கூறி உள்ளது. இதன் மூலம் நிதி மற்றும் வளங்கள் சேமிக்கப்படும் என அவர் தெரிவித்ததாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி மற்றும் ஆந்திரா, கேரளா, உத்தரபிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட பெரும்பாலான மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள், நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, ஜே.பி.நட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர். காஷ்மீர், ஒடிசா மற்றும் டெல்லி மாநில முதல்-மந்திரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

மூலக்கதை