விஜய் மல்லையாவுக்கு எதிராக புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல்?

தினமலர்  தினமலர்
விஜய் மல்லையாவுக்கு எதிராக புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல்?

புதுடில்லி : தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து, 6,027 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, அமலாக்க துறை முடிவு செய்து உள்ளது.

விஜய் மல்லையா நடத்தி வந்த, 'கிங் பிஷர்' விமான சேவை நிறுவனம் திவாலானதை அடுத்து, ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றார். ஐ.டி.பி.ஐ., வங்கியில் பெற்ற, 900 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பிச் செலுத்தாத வழக்கில், மல்லையா மீது அமலாக்க துறையினர், கடந்த ஆண்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில், இதுவரை, விஜய் மல்லையாவின், 9,890 கோடி ரூபாய் சொத்துகள் பறிமுதல் செய்யப்-பட்டுள்ளன.

இந்நிலையில், 2005 - 10 காலத்தில், பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து, விஜய் மல்லையா, 6,027 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, அமலாக்க துறையில், எஸ்.பி.ஐ., வங்கி புகார் அளித்தது. இதன் அடிப்படையில், மல்லையா மீது, பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், மும்பை சிறப்பு நீதி-மன்றத்தில், புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, அமலாக்க துறை முடிவு செய்து உள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், மல்லையாவுக்கு சொந்தமான, 9,000 கோடி ரூபாய் சொத்துகளை பறிமுதல் செய்ய, அமலாக்க துறை, நீதிமன்றத்தில் அனுமதி கோரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் இயற்றப் பட்ட, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்ட திருத்தத்தின் கீழ், மல்லையாவை, தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கவும், கோரிக்கை வைக்கப்படும் என தெரிகிறது.

மூலக்கதை