மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை காடாகும் எவரெஸ்ட் சிகரம்

தினகரன்  தினகரன்
மலை ஏறுவோர் எண்ணிக்கை அதிகமானதால் குப்பை காடாகும் எவரெஸ்ட் சிகரம்

காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரம் குப்பைக்காடாக மாறி வருகிறது. மலை ஏறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதே இதற்கு காரணம்.உலகின் மிக உயரமான மலைச் சிகரம் என்ற பெருமைக்குரியது எவரெஸ்ட் சிகரம். இதன் உயரம் 29 ஆயிரத்து 29 அடி. இந்த சிகரத்தின் மீது ஏறி உச்சியை தொடுவது ஒரு காலத்தில் கனவாக மட்டுமே இருந்தது. 65 ஆண்டுகளுக்கு முன்பு எட்மண்ட் ஹில்லாரி, டென்சிங் நார்கே ஆகியோர் இதன் மீது முதன் முதலில் ஏறி சாதனை படைத்தனர். உயிரை பணயம் வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை, இப்போது சாதாரண விஷயமாகி விட்டது. இப்போது ஆண்டுதோறும் ஏராளமானோர் இந்த மலைச்சிகரத்தை சர்வ சாதாரணமாக ஏறி விடுகின்றனர். சாதனைக்காக செய்யப்பட்டது இப்போது பொழுதுபோக்குக்காக செய்யப்படுகிறது.  மலையேற்றத்துக்கு செல்பவர்கள் ஆங்காங்கு தங்குவதற்கு தேவையான முகாம் அமைப்பதற்கான துணி  (டென்ட்ஸ்), ஆக்சிஜன் கேஸ் சிலிண்டர்கள், கயிறுகள், உணவு பொருட்கள், துணிமணிகள் போன்றவற்றை சுமந்து செல்கின்றனர். அப்போது, அவர்கள் தங்கும் இடங்களில் தாங்கள் பயன்படுத்திய பொருட்களின் குப்பைகளை வீசி விட்டு செல்கின்றனர். மேலும், அவர்கள் ஆங்காங்கு இயற்கை உபாதைகளையும் கழிக்கின்றனர். இதனால், மலையேற்றத்துக்காக பயன்படுத்தப்படும் பாதைகளின் அருகே டன் கணக்கில் குப்பைகள், கழிவுகள் சேர்ந்து சுற்றுச்சூழலை பாதித்து வருகின்றன.இந்த சிகரத்தை தற்போது நூற்றுக்கணக்கானோர் ஏறுகின்றனர். பொழுதுப் போக்குக்காக சில ஆயிரம் அடிகள் மட்டும் ஏறும் பலர், அங்கு பல நாட்கள் தங்கி விட்டு கீழே இறங்கி விடுகின்றனர். சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் மட்டுமே சிகரத்தை தொடுகின்றனர். இந்த சிகரத்தை 18 முறை ஏறி சாதனை படைத்தவர் பெம்பா டோர்ஜே ஷெர்பா. அவர் கூறுகையில், ‘‘மலையேறும் பாதைகளில் பல டன் குப்பைகள் குவிந்துள்ளன. மலை ஏறுபவர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதே இதற்கு காரணம். கடந்த ஓராண்டில் மட்டுமே 600 பேர் சிகரத்தை தொட்டுள்ளனர்’’ என்றார்.நேபாளம் வழியாக சிகரத்தை ஏறும் குழுவில் இடம் பெறும் ஒவ்வொருவரும் 8 கிலோ குப்பையை கீழே கொண்டு வந்து கொடுத்தால், அவர்கள் டெபாசிட் செய்த தொகையில் குறிப்பிட்ட தொகை பரிசாக திருப்பி அளிக்கப்படுகிறது. திபெத் நாட்டின் வழியாக மலையேறுபவர்கள், அவர்கள் எடுத்துச் செல்லும் சுமையை அதே எடையில் திருப்பி எடுத்து வர வேண்டும். இல்லை என்றால், அவர்களின் சுமையில் இருந்து குறையும் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ,7 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.   நேபாளம் வழியாக கடந்தாண்டு மலை ஏறியவர்கள் 25 டன் குப்பைகளையும், 15 டன் மனித கழிவுகளையும் கீழே கொண்டு வந்துள்ளனர். மலையேறும் பெரும்பாலோர் தாங்கள் கொண்டு செல்லும் முகாம்துணி போன்றவற்றை அங்கேயே வீசி விட்டு வந்து விடுகின்றனர். டெபாசிட் பணத்தை திரும்பப் பெற அவர்கள் விரும்புவது கிடையாது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களும், லஞ்சம் வாங்கிக் கொண்டு எதையும் கண்டுக் கொள்வது கிடையாது. மழைக்காலத்தில் இவை அடித்து வரப்பட்டு ஆறுகளில் கலந்து சுற்றுச்சூழல் மாசுவை ஏற்படுத்துகின்றன.

மூலக்கதை