பெற்றோரை கொடுமைப்படுத்தும் பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு இல்லை: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தினகரன்  தினகரன்
பெற்றோரை கொடுமைப்படுத்தும் பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு இல்லை: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மும்பை: மும்பையைச் சேர்ந்த நட்வர் சங்க்வி என்ற முதியவருக்கு அந்தேரி, புரூக்ளின் ஹில்ஸ் ஹவுசிங் சொசைட்டியில் வீடு ஒன்று உள்ளது. இவருடைய மனைவி கடந்த 2014ம் ஆண்டில் இறந்துபோனார். இதைத் தொடர்ந்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நட்வர் விரும்பினார். அவருடைய மகன் பிரித்தீஷ் சங்க்வி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வீட்டில் ஒரு பங்கை தன் பெயருக்கு எழுதி வைக்கும்படி மகன் கோரினார்.நட்வர் சங்க்வி இதற்கு ஒப்புக்கொண்டு வீட்டில் 50% பங்கை தன் மகன் மற்றும் மருமகள் பெயருக்கு கடந்த 2014 மே 23ம் தேதி எழுதி வைத்தார். ஆனால் அதற்கு பிறகும் நட்வர் சிங்கையும் அவருடைய இரண்டாவது மனைவியையும் மகனும் மருமகளும் சேர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். கொடுமை தாங்காமல் அந்த முதிய தம்பதியர் ஒரு வாடகை வீட்டுக்கு சென்று குடியேறினர்.மேலும், நட்வர் சிங்க்வி, மும்பை புறநகர் கலெக்டரிடம் சொத்தை மீட்டுத் தர கோரி மனு அளித்தார்.மனுவை பரிசீலித்த மாவட்ட கலெக்டர், சொத்தை திருப்பி ஒப்படைக்கும்படி 2017 மார்ச் மாதம் பிரித்தீஷ் சிங்க்விக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் சிங்க்வி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “சொத்தில் 50% பங்கை எழுதி வைத்த பிறகு, தந்தையையும் அவருடைய இரண்டாவது மனைவியையும் மகனும் மருமகளும்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே கலெக்டர் பிறப்பித்த உத்தரவில் தவறு இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இதனால் பிரித்தீஷ் சிங்க்வியின் மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மூலக்கதை