நடப்பு சீசன் முடிவில் 735 ஆயிரம் டன் பருத்தி இருப்பால் ஆலைகளுக்கு பற்றாக்குறை ஏற்படாது: இந்திய பருத்தி ஆலோசனை குழு மதிப்பீடு

தினகரன்  தினகரன்
நடப்பு சீசன் முடிவில் 735 ஆயிரம் டன் பருத்தி இருப்பால் ஆலைகளுக்கு பற்றாக்குறை ஏற்படாது: இந்திய பருத்தி ஆலோசனை குழு மதிப்பீடு

கோவை: நாட்டில் நடப்பு பருத்தி சீசன் முடிவில் (செப்டம்பர் 2018) 735.42 ஆயிரம் டன் பருத்தி மீதமாக இருக்கும். இதனால், வரும் மாதங்களில்  நூற்பாலைகளின் பருத்தி தேவைக்கு பற்றாக்குறை ஏற்படாது என்று இந்திய பருத்தி ஆலோசனை குழு மதிப்பீடு செய்துள்ளது. இது குறித்து தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) செயலாளர் செல்வராஜ் கூறியதாவது: இந்திய பருத்தி சீசன் ஆண்டுதோறும் அக்டோபர் முதல்  செப்டம்பர் வரை நிலவுகிறது. அதை முன்னிட்டு இந்திய பருத்தி ஆலோசனை குழு, 2017-18ம் ஆண்டு பருத்தி சீசனின் 2வது ஆலோசனை கூட்டத்தை  கடந்த 16ம் தேதி நியூடெல்லியில் நடந்தது. இதில் ஜவுளித்துறை கமிஷனர் கவிதா குப்தா தலைமை வகித்தார். மத்திய, மாநில அரசுகளின்  ஜவுளித்துறை அதிகாரிகள், நூற்பாலை சங்கங்கள் மற்றும் வர்த்தக அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நாட்டின் பருத்தி இருப்பு, பருத்தி உற்பத்தி, இறக்குமதி அளவு, நூற்பாலைகளின் பருத்தி தேவை மற்றும் இதர பயன்பாட்டு தேவைக்கான  பருத்தி அளவு, ஏற்றுமதி அளவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. அதனடிப்படையில், 2017 அக்டோபர் முதல் 2018ம் ஆண்டு செப்டம்பர்  வரையிலான நடப்பு சீசனில் நிலவிய பருத்தி வரத்து, தேவை மற்றும் இருப்பு நிலவரம் பற்றி மதிப்பிடப்பட்டது. அதன்படி 2017-18ம் ஆண்டின் பருத்தி துவக்க இருப்பு 743.92 ஆயிரம் டன்னாகவும், உற்பத்தி 6,290 ஆயிரம் டன்னாகவும், இறக்குமதி 255 ஆயிரம் டன்  உட்பட மொத்த வரத்து 7,288.92 ஆயிரம் டன் என மதிப்பிடப்பட்டது. இதில் நூற்பாலைகளின் நூல் உற்பத்திக்கான பயன்பாடு 5,015 ஆயிரம்  டன்னாகவும் இதர பயன்பாட்டிற்கு 348.50 ஆயிரம் டன்னும், ஏற்றுமதி 1,190 ஆயிரம் டன்னும் என மொத்த தேவை 6,553.50 ஆயிரம் டன்னாக  மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நடப்பு பருத்தி சீசன் முடிவில் 735.42 ஆயிரம் டன் மீதமாக இருக்கும்  எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய  கணிப்பின் மூலம் நடப்பு சீசனில்  பருத்தி தேவைக்கு பற்றாக்குறை ஏற்படாது என்று கண்டறிப்பட்டுள்ளது.இவ்வாறு சைமா செயலாளர் செல்வராஜ் கூறினார்.

மூலக்கதை