வங்கி டெபாசிட்களில் ஆர்வமில்லை சிறுசேமிப்பு திட்டங்களுக்கு கூடுகிறதா மவுசு?

தினகரன்  தினகரன்
வங்கி டெபாசிட்களில் ஆர்வமில்லை சிறுசேமிப்பு திட்டங்களுக்கு கூடுகிறதா மவுசு?

புதுடெல்லி: வங்கி டெபாசிட்களை விட, மியூச்சுவல் பண்ட்கள், காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடுகள் அதிகரித்துள்ளது, புள்ளி விவரங்கள் மூலம்  தெரியவந்துள்ளது. முன்பு வங்கி டெபாசிட்களில் ஆர்வம் காட்டி வந்த மக்கள், தற்போது மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.  சமீபகாலமாக மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு அதிகரித்து வருவது இதை நிரூபிக்கிறது. அவ்வப்போது இந்த முதலீடுகள் சிறு சரிவைச் சந்தித்தாலும்,  ஒட்டுமொத்த அளவில் மக்களிடையே ஈர்ப்பு பெற்றுள்ளது. இதுபோல் சில சிறு சேமிப்பு திட்டங்களிலும் முதலீடுகள் அதிகரித்துள்ளன. தேசிய சேமிப்பு நிறுவன புள்ளி விவரப்படி, சிறுசேமிப்பு திட்டங்களில் 2016-17 நிதியாண்டில் 1.17 லட்சம் கோடியாக இருந்த முதலீடுகள் கடந்த  நிதியாண்டில் ₹1.55 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளன. அதாவது, முதலீடு 33 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. 2011-12 நிதியாணட்டில் இந்தத்  திட்டங்களில் முதலீடு ₹3,000 கோடி தான். அதற்கு முன்பும் சில ஆண்டுகள் சிறுசேமிப்பு முதலீடுகள் பெரிய அளவில் ஈர்க்கப்படவில்லை. தற்போது  இந்த முதலீடு ஏறக்குறைய 50 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. அஞ்சலக சேமிப்பு திட்டங்கள், தேசிய சேமிப்பு பத்திரங்கள், பிபிஎப், கிசான் விகாஸ் பத்திரம், செல்வமகள் சேமிப்பு திட்டங்களுக்கு மக்களிடையே  பரவலான வரவேற்பு காணப்படுகிறது. இவற்றில் தேசிய சேமிப்பு பத்திரங்களில் மட்டும் முதலீடு கடந்த நிதியாண்டில் சற்று குறைந்துள்ளது. மற்ற  திட்டங்களில் முந்தைய ஆண்டுகளை விட முதலீடு அதிகரித்துள்ளது. இதுபோன்றே மியூச்சுவல் பண்ட்களில் முதலீடுகள் 60 சதவீதம் உயர்ந்துள்ளன. அதேநேரத்தில், வங்கி டெபாசிட்கள் கணிசமான அளவு சரிவை சந்தித்துள்ளன. 2016-17 நிதியாண்டில் பண மதிப்பு நீக்கத்தால் வங்கிகளில் டெபாசிட்கள்  ஏராளமாகக் குவிந்தன. ஆனால், அதன்பிறகு மக்கள் பணமாக கையாள தொடங்கிவிட்டதாலும், வங்கிகளில் வட்டி விகிதம் வெகுவாக குறைந்து  விட்டதாலும் வங்கி டெபாசிட்களில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் சில ஓரளவு பலன் தருகின்றன. ஆனால், வங்கிகளில் நீண்டகால டெபாசிட்  செய்தாலும் பண வீக்கத்தை ஈடுசெய்யும் அளவுக்கு அவற்றில் லாபம் கிடைப்பதில்லை. இதை மக்கள்விரும்பவில்லை. எனவேதான், அதிக லாபம்  ஈட்ட மியூச்சுவல் பண்ட்களில் டெபாசிட் செய்கின்றனர். முன்பு இதுபோன்ற முதலீடுகளில் பொதுமக்கள் பலர் தயக்கம் காட்டி வந்தனர். ஆனால்,  வங்கிகளில் வட்டி குறைத்ததால் அவர்களின் மனநிலை மாறியுள்ளது என்றார். ரியல் எஸ்டேட், தங்கம் இவற்றில் அதிக பணம் முதலீடு செய்பவர்களின் முதல் தேர்வு முன்பு ரியல் எஸ்டேட் அல்லது தங்கம் என இருந்தது. ஆனால், பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு பல்வேறு தொழில்கள் முடங்கி, பணப்புழக்கமும் குறைந்ததால் ரியல் எஸ்டேட்டில் தற்காலிக மந்தநிலை  ஏற்பட்டது. இதனால் கடந்த நிதியாண்டில் இதில் முதலீடு செய்வது குறைந்தது. அதோடு, ரெரா சட்டம், ஜிஎஸ்டி போன்றவையும் முதலீடுகள் குறைய  முக்கிய காரணமாக அமைந்து விட்டது. தங்கம் விலை அவ்வப்போது ஏற்றத்தாழ்வு இருந்தாலும், பெரிய அளவில் உயர்வு இல்லாததால் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என சந்தை  நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை