கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டம் கெஜ்ரிவாலுக்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டம் கெஜ்ரிவாலுக்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு

புதுடெல்லி: கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்க மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.

அரசின் நலத்திட்டங்களுக்கு கவர்னர் அனில் பைஜால் முட்டுக்கட்டை போடுவதாகவும், மத்திய அரசு இதற்கு ஆதரவாக இருப்பதாகவும் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று அதிருப்தி தெரிவித்த கெஜ்ரிவால், அவர்கள் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.



இதை கவர்னர் கண்டுகொள்ளாததால், கவர்னர் மாளிகையில் கெஜ்ரிவால் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார். இன்றுடன் 7 நாட்களாகியும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

கெஜ்ரிவாலை சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரை யாரும் சந்திக்க முடியவில்லை.

இந்நிலையில், கெஜ்ரிவாலின் போராட்டத்துக்கு கர்நாடகா மாநில முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றுள்ள 4 முதல்வர்களும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்தனர். கெஜ்ரிவாலை சந்திக்க முதல்வர் மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்தார்.

ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், கெஜ்ரிவாலின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க 4 முதல்வர்களும் அனுமதி கேட்டுள்ளனர்.

இதற்கிடையே, பிரதமர் இல்லம் நோக்கி பேரணி நடத்த ஆம் ஆத்மி கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

.

மூலக்கதை