விபத்து அதிகரிப்புக்கு தி.மு.க. தான் காரணம் தி.மு.க. உறுப்பினருக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்

PARIS TAMIL  PARIS TAMIL
விபத்து அதிகரிப்புக்கு தி.மு.க. தான் காரணம் தி.மு.க. உறுப்பினருக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்

சட்டசபையில் திருச்சி 4 வழிச்சாலை குறித்து தி.மு.க. உறுப்பினர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர், சர்வீஸ் சாலை அமைக்கப்படாததால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தேசிய நெடுஞ்சாலை 67-ல் தஞ்சாவூர் முதல் திருச்சி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டது. 2006-ல், தி.மு.க., மத்தியிலே ஆட்சியிலே இருந்த காலத்திலே அமைக்கப்பட்டது. அ.தி.மு.க. அரசு வந்த பிறகு தான், இந்த சாலை அமைக்கப்பட்டது மாதிரியும், பல உயிர்கள் போனது போலவும், உறுப்பினர் பேசினார். ஜெயலலிதா இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், ஒரு சாலை அமைக்கின்ற போது, முதல் கட்டப்பணி நிலத்தை கையகப்படுத்தப்பட்ட பின்பு தான் சாலை அமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எங்களிடத்திலே எடுத்து சொல்லியிருக்கிறார்கள். ஆகவே, நீங்கள் சாலை அமைக்கின்றபோதே, இதற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தி, சாலை அமைத்திருந்தால், இவ்வளவு உயிர் போயிருக்காது என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆகவே, நீங்கள் 2006-ல் சாலை அமைக்கின்றபோதே, எவ்வளவு அகலம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் கணக்கிட்டு, அதற்கு தக்கவாறு சாலை அமைத்திருந்தால், இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது. ஆகவே, உங்களுடைய காலத்திலே, சரியான முறையிலே இந்த சாலை அமைக்காத காரணத்தினால், இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்படுகின்ற பணி. இருந்தாலும், உறுப்பினர் சொன்னதைப் போல, அங்கிருக்கின்ற மக்களுடைய கோரிக்கையின் அடிப்படையிலே, இந்த அரசால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அண்மையிலே, மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்காரி வந்தபோது, உறுப்பினர் சொன்ன கருத்தையெல்லாம் அவரிடத்திலே நான் பதிவு செய்திருக்கின்றேன். ஆகவே, அதை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றேன். அவர்களும் பரிசீலிப்பதாக சொல்லி இருக்கின்றார். தமிழ்நாடு அரசாங்கத்தினால் எந்த சுணக்கமும் இல்லை. இது மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகின்ற பணி. இருந்தாலும் 60 மீட்டர் அகலத்திலிருந்து 45 மீட்டராக குறைக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்திருக்கின்றோம். அப்படி இருந்தால் கூட, நிறைய கடைகள் அடிபடுகின்றன.

ஆகவே, 2006-ம் ஆண்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்ற போது, நீங்கள் அகலமாக அந்த சாலையை அமைத்திருந்தால், அங்கே புதிதாக கட்டிடம் கட்டி இருக்க மாட்டார்கள். ஆகவே, இப்போது இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. நாளைக்கு தேவையான நிலத்தை நீங்கள் கையகப்படுத்தாமல், ஒரு சாலைக்கு எவ்வளவு அகலம் வேண்டும் என்பதை கணக்கிடாமல், சாலை அமைத்ததன் விளைவு தான், இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது. இந்த சர்வீஸ் சாலை அமைப்பதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

தி.மு.க. உறுப்பினர் பொன்முடி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

விழுப்புரம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் ரெயில்வே கடவு எண் 2-ல் புதிதாக மேம்பாலம் அமைக்க கருத்துரு பெறப்பட்டு ரெயில்வே பணிகள் திட்டம் 2010-2011-ல் மேம்பாலம் அமைக்க ரூ.31.60 கோடி மதிப்பில் நிர்வாக அனுமதி 10.11.2010 அன்று வழங்கப்பட்டது.

விழுப்புரம் மார்க்கத்தின் அணுகு சாலை மற்றும் சேவை சாலை அமைக்க 42 நபர்களிடமிருந்து 1411.00 ச.மீ நிலம் கையகப்படுத்தி அப்பகுதிகளில் வலுவூட்டப்பட்ட தரைதள தடுப்புச்சுவர் மற்றும் அணுகுசாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் விழுப்புரம் நகராட்சியின் பாதாள சாக்கடை குறுக்கிடுகிறது. இதனை மாற்றி அமைக்கும் பணி விழுப்புரம் நகராட்சி மூலம் நடைபெறுகிறது. இப்பணி முடிவடைந்தவுடன் விழுப்புரம் பகுதி அணுகுசாலை பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, விரைவில் பாலம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை