முதல்-அமைச்சரின் டெண்டர் ஊழல்களை விசாரிக்க லஞ்சஊழல் ஒழிப்புத்துறை தானாகவே முன்வர வேண்டும்

PARIS TAMIL  PARIS TAMIL
முதல்அமைச்சரின் டெண்டர் ஊழல்களை விசாரிக்க லஞ்சஊழல் ஒழிப்புத்துறை தானாகவே முன்வர வேண்டும்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெண்டர் மோசடிகள் அணி அணியாக பேரணி வகுத்து நிற்கின்றன.

டெண்டர்களில் பங்கேற்பவர்கள் ‘ஏற்கனவே செய்த பணிகளுக்கு’ நிறைவுச்சான்றிதழ் வழங்க வேண்டும், ‘தர சான்றிதழுடன்’ டெண்டரை ஆன்-லைனில் ‘அப்லோடு’ செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஆட்சியாளர்களின் உறவினர்களுக்கு டெண்டர் வழங்குவதற்கு மிகவும் சாதகமாக பயன்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது.

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்போல், இன்றைய தினம் முதல்-அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி வகிக்கும் நெடுஞ்சாலைத்துறையில், தன் பதவியை பயன்படுத்தி சம்பந்திகளுக்கும், பினாமிகளுக்கும், தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் பந்தி வைப்பதைப்போல, எப்படி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களைக் கொடுத்திருக்கிறார்? வேலையின் மதிப்பீடுகளை எப்படி செயற்கையாக எவ்வித அடிப்படையுமின்றி உயர்த்தியிருக்கிறார்? என்பதை எல்லாம் விரிவாக விளக்கி, மாநில விஜிலென்ஸ் கமிஷனருக்கு தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி புகார் கொடுத்து இருக்கிறார்.

இன்றைக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல்களை தி.மு.க. அம்பலப்படுத்தி இருக்கிறது.

அனைத்துத்துறைகளிலும் அ.தி.மு.க. ஆட்சியின் 7 ஆண்டு காலத்திலும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரான பிறகு நாள்தோறும் நடைபெற்றுவரும் இமாலய டெண்டர் ஊழல் மற்றும் அமைச்சர்களின் டெண்டர் ஊழல்களையும் விசாரிக்க லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை தானாகவே முன்வரவேண்டும்.

லஞ்சஊழல் ஒழிப்புத்துறை தயங்கினால் நீதிமன்றத்தை நாட தி.மு.க. தயங்காது என்று தெரிவித்து அமைச்சர்களுக்கு சிவப்புக்கம்பளம் விரித்து ஊழலின் பச்சை சிரிப்புக்கு உற்சாகமாக உதவிடவேண்டும் என்ற ஒரு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் விருப்பத்தால், நேர்மையாளர்கள் நிரம்பிய தமிழ்நாடு ஐ.ஏ.எஸ். நிர்வாகம் திசைமாறி சென்று சேற்றில் இறங்கிவிடக்கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனர், கண்காணிப்பு கமிஷனர் மற்றும் நிர்வாகசீர்த்திருத்த கமிஷனரிடம் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

உலக வங்கி நிதி உதவியுடன் ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் 4 வழிச்சாலை திட்டத்துக்கு ரூ.713.34 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த திட்ட மதிப்பீடு ரூ.1,515 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்துக்கான ஒப்பந்தம் நெடுஞ்சாலைத்துறையை கைவசம் வைத்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் மருமகள் திவ்யாவின் உறவினருக்கு கொடுத்துள்ளார். நெல்லை-செங்கோட்டை-கொல்லம் 4 வழிச்சாலை திட்டத்துக்கு ரூ.179.94 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்த பணியை எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுன் குமாரின் மாமனாருக்கு கொடுத்துள்ளார்.

அச்சுறுத்தும் தந்திரங்களை பயன்படுத்தி தன் உறவினர்களின் நிறுவனங்களுக்கு எடப்பாடி பழனிசாமி சட்ட விரோதமாக ஒப்பந்த பணிகளை வழங்கியுள்ளார். தகுதி வாய்ந்தவர்களுக்கு ஒப்பந்த பணிகள் வழங்கப்படவில்லை. பொது ஊழியரான முதல்-அமைச்சர் அரசு ஒப்பந்த பணியை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உறவினர்களுக்கு வழங்கியது சட்டவிரோதம் ஆகும்.

இது ஊழல் சட்டத்தின் கீழ் கிரிமினல் குற்றம் ஆகும். எனவே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒப்பந்த பணிகள் பெற்ற அவருடைய உறவினர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மூலக்கதை