தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லுமா? சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லுமா? சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு

அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்தனர்.

இவர்கள், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கவர்னரிடம் கடந்த ஆண்டு மனு கொடுத்தனர்.

இதைதொடர்ந்து 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதைதொடர்ந்து ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.

இதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், ‘சபாநாயகரின் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க சில ஆவணங்களை தர வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரினோம். அந்த ஆவணங்களை தந்தால் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறோம் என்றோம். ஆனால், நாங்கள் கேட்ட ஆவணங்களை சபாநாயகர் அளிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் சபாநாயகரின்

நடவடிக்கை சட்டப்படி செல்லத்தக்கது அல்ல. சபாநாயகரின் நடவடிக்கை அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எங்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தவறான முன் உதாரணம் ஆகும். எனவே, எங்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையிலான டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பல நாட்கள் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர், கொறடா, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருக்காக சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் பலர் இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். தகுதிநீக்கம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தனது பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருடன் சேர்த்து தற்போது அ.தி.மு.க.வுக்கு 114 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்ளனர். தி.மு.க.வுக்கு 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதுதவிர டி.டி.வி.தினகரன் சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.

தகுதிநீக்கம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் அ.தி.மு.க. அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க தற்போதைய சூழ்நிலையில் 4 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

இதுபோன்று ஒரு சூழ்நிலை வந்தால் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் அறிவிக்கவில்லை. அவர்கள், அவ்வப்போது எதிர்மறையான நிலைப்பாட்டையே மேற்கொண்டுள்ளனர். எனவே, தகுதிநீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால் எடப்பாடி அரசு கவிழ்ந்து விடும் என்ற சூழ்நிலை தான் தற்போது இருந்து வருகிறது.

அதே வேளையில் 2 நீதிபதிகள் தனித்தனி தீர்ப்பை அளித்தால் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும். 18 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் சபாநாயகர் தன்னிச்சையாக முடிவு எடுத்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இருப்பதால் அவர்களது விளக்கத்தை கேட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க சபாநாயகருக்கு ஐகோர்ட்டு உத்தரவிடலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துமா? என்பது இன்று தெரியவரும்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் யார்? யார்?

தமிழக சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பெயர் மற்றும் அவர்களின் தொகுதி விவரம் வருமாறு:-

தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி), பி.வெற்றிவேல் (பெரம்பூர்), வி.செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி), கே.கதிர்காமு (பெரியகுளம்), டி.ஏ.ஏழுமலை (பூந்தமல்லி), ஆர்.ஆர்.முருகன் (அரூர்), எஸ்.முத்தையா (பரமக்குடி), சோ.மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), மு.கோதண்டபாணி (திருப்போரூர்), ஆர்.சுந்தரராஜ் (ஓட்டப்பிடாரம்), எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்), ஆர்.தங்கதுரை (நிலக்கோட்டை), ஆர்.பாலசுப்பிரமணி (ஆம்பூர்), எஸ்.ஜி.சுப்பிரமணியன் (சாத்தூர்), சி.ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்), கே.உமாமகேஸ்வரி (விளாத்திகுளம்).
 

மூலக்கதை