ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

விகடன்  விகடன்
ஏர்செல்மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்தது. 


கடந்த 2006-ம் ஆண்டு, மத்திய நிதித்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடுசெய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. நிதி நிறுவன முறைகேட்டில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குத் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளன என்று சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது.

இந்தக் குற்றச்சாட்டின் ஒரு பகுதியாக, கார்த்திக் சிதம்பரத்தின் 1.16 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை இருமாதங்களுக்கு முன்பு முடக்கியது. இந்த விவகாரத்தை அமலாக்கத்துறையும், சிபிஐ-யும் தீவிரமாக விசாரித்துவருகின்றன.  நிதி நிறுவன முறைகேடு வழக்கு, டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. இதனிடையே, கடந்த 3-ம்தேதி வழக்கை விசாரித்த நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் தர மறுத்தது, அவரைக் கைதுசெய்ய ஜூலை 1-0ம் தேதி வரை தடைவிதித்து உத்தரவிட்டது. இந்நிலையில்,  அந்நிய நேரடி முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது.
 

மூலக்கதை