"வழக்கை வாபஸ் பெறவில்லையெனில் நீதிமன்றம் செல்வேன்" - அமீர் காட்டம்

விகடன்  விகடன்
வழக்கை வாபஸ் பெறவில்லையெனில் நீதிமன்றம் செல்வேன்  அமீர் காட்டம்

கோவையில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், இயக்குநர் அமீர் முன்வைத்த கருத்துகளுக்கு, நிகழ்ச்சியில் பார்வையாளராகப் பங்கேற்ற பா.ஜ.க-வினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. 

இந்த விவகாரத்தில், இயக்குநர் அமீர் மீதும், அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும் போலீஸார் வழக்குப்பதிவுசெய்தனர். இந்த நிலையில், வழக்குப்பதிவு செய்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அமீர் மீதான வழக்கை ரத்துசெய்யக்கோரி, பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்கள் மனு கொடுத்தனர். இந்நிலையில், அறிக்கை ஒன்றை அமீர் வெளியிட்டுள்ளார். அதில், "சமீப காலமாக தேசத்தை ஆளுகின்ற தேசியக் கட்சி, அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு புதிய பட்டங்களைச் சூட்டுவது, நடக்காததை நடந்ததாகக் கூறுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்திய தேசத்தில், மைய அரசாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேச முடியும் செய்ய முடியும் என்றால்,  அதற்குப் பெயர் சர்வாதிகார மமதை அல்லது ஜனநாயகப் படுகொலை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

என் மீதும் அந்தத் தொலைக்காட்சி மீதும் போடப்பட்டுள்ள வழக்குகளில் உண்மைத் தன்மை இல்லாத காரணத்தால், அவ்வழக்கை வாபஸ் பெறுவதோடு மட்டுமல்லாமல் தவறிழைத்தவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 'சத்தியமே வெல்லும்' என்ற வார்த்தையை தன்னுடைய இலச்சினையில் பொறித்திருக்கிற தமிழக அரசு, கூடிய விரைவில் அதைச் செய்யும் என நம்புகிறேன். இல்லையேல், சட்டப்படி நீதிமன்றத்தை நாடி வழக்கை சந்தித்து, அங்கு நடந்த உண்மைகளை சாட்சியங்கள் மூலமாக நிலைநாட்டி வெற்றிபெறுவதோடு, மக்கள் உண்மைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் இவ்வழக்கை அமைத்துக்கொள்வேன். எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் இருந்துவருகின்ற கட்சிகள். இளைஞர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறிப்பிட்டிருந்தார்.

மூலக்கதை