நாளை உலகக்கோப்பை... இன்று ஸ்பெயின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம்

விகடன்  விகடன்
நாளை உலகக்கோப்பை... இன்று ஸ்பெயின் பயிற்சியாளர் அதிரடி நீக்கம்

லகக்கோப்பை கால்பந்துத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், ஸ்பெயின் பயிற்சியாளர் ஜூலன் லெப்தோகி அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன், ரியல்மாட்ரிட் அணி பயிற்சியாளராக ஜூலன் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி அறிவித்த 24 மணி நேரத்தில், ஸ்பெயின் கால்பந்து சங்கம் அதிரடியாக அவரை நீக்கியுள்ளது. பயிற்சியாளராக இருந்த வின்சென்ட் டெல் பாஸ்க் 2016-ம் ஆண்டு பதவி விலகியதையடுத்து, ஜூலன்  பயிற்சியாளரானார். கடந்த மாதம் 2020-ம் ஆண்டு வரை பயிற்சியாளராக நீடிக்க புதிய ஒப்பந்தத்தில் அவர் கையொப்பமிட்டார். திடீரென்று ரியல்மாட்ரிட் அணி  பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.  

இதுகுறித்து ஸ்பெயின் கால்பந்து சங்கத் தலைவர் லூயிஸ் ரபியல்ஸ் கூறுகையில், ''உலகக் கோப்பைத் தொடர் முக்கியமானது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக நாங்கள் கருதப்படுகிறோம். அணியை வலுவாக மாற்றியதில் முக்கிய பங்கு ஜூலனுக்கு உள்ளது.  எனக்கு அவர்மீது மிகுந்த மரியாதை உள்ளது. எனினும் இத்தகைய கடினமான முடிவு எடுக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். இதற்காக நாங்கள் விமர்சனத்துக்குள்ளாவோம் என்பதையும் மறுக்கவில்லை '' என்று தெரிவித்துள்ளார்.

ஜூலன் தலைமையில் ஸ்பெயின் அணி 20 ஆட்டங்களில் விளையாடி 14-ல் வெற்றிகண்டுள்ளது. ஸ்பெயின் அணியின் புதிய பயிற்சியாளராக பெர்னாண்டோ ஹியெரா நியமிக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணி ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணியுடன் மோதுகிறது

மூலக்கதை