திருடு போன ஸ்மார்ட் சைக்கிள்கள்... முடங்கிய கோவை சைக்கிள் ஷேரிங் திட்டம்!

விகடன்  விகடன்
திருடு போன ஸ்மார்ட் சைக்கிள்கள்... முடங்கிய கோவை சைக்கிள் ஷேரிங் திட்டம்!

ரபரப்பான வாழ்க்கையில் மக்கள் தொகைக்கு ஈடாக வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பிஸி சிட்டியான கோவையின் மக்கள் தொகை 20 லட்சத்தைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இதனால், சென்னையுடன் போட்டிபோடும் அளவுக்கு, கோவையிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும், அதிகரிக்கும் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசும் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.

இதையடுத்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் சைக்கிள் ஷேரிங் திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இதற்காக, சென்னையில் களமிறக்கப்பட்ட சீன நிறுவனமான ஓஃபோ (Ofo), பரீட்சார்த்த முறையில் கோவையிலும் சைக்கிள்களை களமிறக்கியது. ஜி.பி.எஸ் தொழில்நுட்பம், டிஜிட்டல் டிஸ்ப்ளே, மொபைல் ஆப் என `ஜென் Z'  தலைமுறையினருக்குத் தகுந்த வடிவில், கோவையில் களமிறங்கியது சைக்கிள் ஷேரிங் திட்டம். சோதனை அடிப்படையில், மக்கள் பயன்பாட்டுக்கு விட்டு, பின்னர் மக்களின் எண்ண ஓட்டத்தைத் திரட்டும் பணியில் அந்நிறுவனம் இறங்கியது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்தத் திட்டத்துக்காக ரூ.38 கோடியை ஓஃபோ நிறுவனம் ஒதுக்கியது. முதலில் பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில கல்லூரி வளாகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, மற்ற பகுதிகளிலும் சைக்கிள் ஷேரிங் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆப்பை டவுன்லோடு செய்து, க்யூ. ஆர். கோட் மூலமாகவே சைக்கிளை அன்லாக் செய்ய முடியும். அதேபோல, ஜி.பி.எஸ் வசதி இருப்பதால், சைக்கிள் இருக்கும் இடத்தையும் கண்காணிக்க முடியும் என செக்யூரிட்டி வசதிகளும் இந்த சைக்கிளில் ஏராளம். ஆனால், நாளடைவில் ஓஃபோ நிறுவனத்துக்கு அடி மேல் அடி விழுந்தது. சிலர் அந்த சைக்கிளை உடைத்தனர். சிலர் சைக்கிளை தங்களது வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். சிலர், சைக்கிளுக்கு கலர் பெயின்ட் அடித்துப் பயன்படுத்தி வருகின்றனர். சைக்கிளை குளத்தில் போட்டவர்களும் உண்டு. இது ஒருபுறமிருக்க, ஓஃபோ நிறுவனத்தின் சைக்கிள் திட்டம், பல நாடுகளில் தோல்வியைத் தழுவி, மலையைப் போல சைக்கிள்கள் குப்பையாகக் குவிக்கப்பட்டிருக்கும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. குறிப்பாக, தங்களது குப்பைக் குவியலை இந்தியாவில் களமிறக்கவே ஓஃபோ இங்கு வந்துள்ளது எனவும் கூறப்பட்டது.

இதுகுறித்து ஸ்மார்ட்சிட்டி அதிகாரிகள் கூறுகையில், ``சைக்கிள் ஷேரிங் என்பது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முக்கியமான ஒன்று. இதற்காக ஓஃபோ நிறுவனம், கடந்த மூன்று மாதங்களாக சோதனை அடிப்படையில்தான் சைக்கிள்களை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. கடந்த, மூன்று மாதங்களாக மக்கள் இதைப் பயன்படுத்தும் செயல்பாடுகள் குறித்த தகவல்களை, அந்நிறுவனம் திரட்டியுள்ளது. இந்த மூன்று மாதங்களில் பல சைக்கிள்கள் சேதமடைந்தது உண்மைதான். ஆனால், இதை நினைத்து அந்நிறுவனம் வருத்தப்படவில்லை. `வெளிநாடுகளிலும், இதுபோன்ற சேதங்கள் ஏற்படுவது சகஜம்தான்' எனக் கூறுகிறார்கள். மேலும், கோவையில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், மிகவும் திருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

`தற்போது, திரட்டியுள்ள தகவல்களை வைத்து, கோவையில் சைக்கிள் ஷேரிங்கை எப்படிச் செயல்படுத்தலாம் என்ற தெளிவான திட்டத்தோடு மீண்டும் வருகிறோம்' என ஓஃபோ நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கான, டெண்டரில் ஓஃபோ நிறுவனமும் கலந்து கொள்ளும். அதில், எங்களது விதிமுறைகளுக்குத் தயாராக உள்ள நிறுவனத்துக்கு டெண்டர் வழங்குவோம். மீண்டும் ஓஃபோவே வருவதற்கும் வாய்ப்புள்ளது. மேலும், 'இந்த சைக்கிள் சேதங்களால் ஏற்படும் குப்பைகளுக்கு அந்தச் சம்பந்தப்பட்ட நிறுவனம்தான் பொறுப்பு' என்றும் கூறியுள்ளோம்" என்றனர்.

இதுதொடர்பாக கருத்துக் கேட்க ஓஃபோ நிறுவனத்தைத் தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் நம் அழைப்பை ஏற்கவில்லை.
 

மூலக்கதை