வாக்கு வங்கிக்காக இப்தார் விருந்து பாஜ எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வாக்கு வங்கிக்காக இப்தார் விருந்து பாஜ எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

ஐதராபாத்: வாக்கு வங்கிக்காக அரசியல் கட்சிகள் இப்தார் விருந்து வைக்கின்றன என்று தெலங்கானா பாஜ எம்எல்ஏ டி ராஜா சிங் லோத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், கோஷாமால் தொகுதியின் பாஜ எம்எல்ஏ  டி ராஜா சிங் லோத்.

இவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: ரமலான் மாதத்தில் ஏராளமான அரசியல்கட்சித் தலைவர்கள் இப்தார் விருந்து வைக்கிறார்கள். தெலங்கானாவிலும் ஏராளமான கட்சிகள் தலையில் குல்லா அணிந்தும், செல்பி எடுத்துக் கொண்டும் இப்தார் விருந்தில் பரபரப்பாக இருக்கின்றன.அந்தக் கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக இப்தார் விருந்து வைக்கிறார்கள். ஆனால், நான் அப்படிப்பட்டவன் இல்லை.

அனைத்து மதங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறேன். ஓட்டுக்காக பிச்சை எடுக்கும் கட்சிகள்தான் இப்தார் விருந்து நடத்துகின்றன.

உலகில் முஸ்லிம்களுக்காக 50 நாடுகள், கிறிஸ்தவர்களுக்காக 100 நாடுகள் இருக்கும் போது, இந்துக்களுக்கான நாடாக இந்தியா ஏன் இருக்கக்கூடாது. மாநிலம் நிதிச்சிக்கலில் இருப்பதாகவும் மத்திய அரசு உதவ வேண்டும் எனவும் முதல்வர் சந்திரசேகர ராவ் கூறுகிறார்.

ஆனால், ரூ. 66 கோடி செலவு செய்து இப்தார் விருந்து வைக்கிறார். இவ்வாறு அந்த வீடியோவில் ராஜா சிங் பேசியிருந்தார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த வீடியோவைப் பார்த்த போலீஸார் தாமாக முன்வந்து டி ராஜா எம்எல்ஏ மீது ஐபிசி 153 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து போலீஸ் டெபுடி கமிஷனர் சயத் பியாஸ் கூறுகையில், இரு மதத்தினருக்கு இடையே விரோதத்தை உண்டாக்கும் வகையில் பேசிய பாஜக எம்எல்ஏ டி ராஜா மீது ஐபிசி பிரிவு 153ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

.

மூலக்கதை