பாஜ, ஆர்எஸ்எஸ்சின் பொய் வழக்குகளை சந்திக்க தயார்: ராகுல்காந்தி பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாஜ, ஆர்எஸ்எஸ்சின் பொய் வழக்குகளை சந்திக்க தயார்: ராகுல்காந்தி பேட்டி

பிவாண்டி: கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது மகாராஷ்டிர மாநிலம் தானேவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்று பேசினார்.

இதையடுத்து, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குந்த் பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், தேவைப்பட்டால், ஆர்எஸ்எஸ் அமைப்பிடம்  வருத்தம் தெரிவியுங்கள் அல்லது வழக்கை எதிர்கொள்ளுங்கள் எனத் தெரிவித்தது.

இதையடுத்து, ராகுல் காந்தி வழக்கை எதிர்கொள்வதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த மே மாதம் இந்த வழக்கு பிவாண்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜுன் 12-ம் தேதி ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, இந்த வழக்கு பிவாண்டி நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி ஏ. ஐ. சேக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ராகுல்காந்தி நேரில் ஆஜரானார்.

இதை தொடர்ந்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு வெளியே ராகுல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

குறிப்பிட்ட சில பணக்காரர்களுக்காக மத்திய அரசு கோடிக்கணக்கில் கடன் தள்ளுபடி செய்கிறது. ஆனால், விவசாயிகளுக்கு கடனும், கடன் தள்ளுபடியும் அளிக்க மறுக்கிறது.

வானொலியில் மன்கிபாத் என்று பேசும் பிரதமர் மோடி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு, விவசாயிகளைப் பாதுகாப்பது குறித்துப் பேசாமல் மவுனமாக இருக்கிறார். பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு துணிவிருந்தால், என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும்  போடட்டும்.

அத்தனை வழக்குகளிலும் சட்டப் போராட்டம் நடத்தி, பொய் வழக்குகள் என நிரூபித்து விடுதலையாவேன்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

.

மூலக்கதை