கர்நாடகத்தின் ஃபிட்னஸ் குறித்தே எனக்கு அதிக அக்கறை : மோடியின் சவாலுக்கு குமாரசாமி பதில்

தினகரன்  தினகரன்
கர்நாடகத்தின் ஃபிட்னஸ் குறித்தே எனக்கு அதிக அக்கறை : மோடியின் சவாலுக்கு குமாரசாமி பதில்

பெங்களூரு: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் சவாலை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார். சுமார் 1.48 நிமிடம் ஓடும் வீடியோவை வெளியிட்டுள்ள பிரதமர், காலை உடற்பயிற்சியில் சில அம்சங்களை வெளியிட்டுள்ளதாகவும், யோகாவை தவிர்த்து, இயற்கையின் ஐந்து தத்துவங்களான ஆகாயம், நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்ட நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்வதாக கூறியுள்ளார். இது தமக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிப்பதாக கூறியுள்ளார். மற்றொரு ட்விட்டரில் கர்நாடகா முதல்வர் குமாரசாமி, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவு மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட துணிச்சலான ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு உடற்தகுதி குறித்த வீடியோவை வெளியிடுமாறு மோடி சவால் விடுத்துள்ளார்.இந்நிலையில் மோடியின் ஃபிட்னஸ் சவாலுக்கு பதிலளித்துள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, என்னுடைய உடல்நலத்தில் மிகுந்த அக்கறை செலுத்திய பிரதமருக்கு நன்றி. தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் எனக்கு உள்ளது. அனைவருக்கும் உடற்தகுதி மிகவும் முக்கியம், அவசியம் என்பதை ஆதரிக்கிறேன். என்னுடைய அன்றாட வாழ்வில் யோகா, டிரட்மிலில் ஓடுவது உள்ளிட்டவை முக்கிய அங்கமாக உள்ள நிலையில், என்னுடைய உடல்நலத்தைக் காட்டிலும், இப்போது மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பிட்னஸில்தான் அதிகமான அக்கறை எனக்குத் தேவை. அதற்கு உங்களுடைய ஆதரவும் தேவை என பதிலளித்துள்ளார்

மூலக்கதை