பெங்களூரு ஜெயநகர் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றி

தினகரன்  தினகரன்
பெங்களூரு ஜெயநகர் இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றி

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜெயநகர் சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 2,889 வாக்குகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் கடந்த மே மாதம் 12ம் தேதி நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் பாஜ வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்தார். இந்நிலையில், ஜெயநகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் சவுமியா ரெட்டி, பாஜ சார்பில் பிரகலாத்பாபு மற்றும் சுயேச்சையாக ரவிகிருஷ்ண ரெட்டி, கராத்தே ஸ்ரீகாந்த் உள்பட 19 பேர் ஜெயநகர் சட்டப்பேரவை தொகுதி போட்டியிட்டனர். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. எண்ணப்பட்ட ஒவ்வொரு சுற்றிலும் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி முன்னிலை பெற்றார். பாஜ வேட்பாளர் பிரகலாத்பாபு பின்தங்கி இருந்தார். 10வது சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். இதைதொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளரின் வாக்குகள் குறைந்தும், பாஜ வேட்பாளரின் வாக்குகள் அதிகரித்து வந்தது. 11வது சுற்றில் இருந்து 16வது கடைசி சுற்றுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி முன்னிலையில் இருந்தாலும் வாக்குகள் வித்தியாசம் குறைந்து வந்தது. கடைசி சுற்றில் சவுமியா ரெட்டிக்கு 54,475 வாக்குகளும், பாஜ வேட்பாளர் பிரகலாத் பாபுவுக்கு 51,568 வாக்குகளும் கிடைத்தன. சுமார் 2,889 வாக்குகள் வித்தியாசத்தில் சவுமியா ரெட்டி வெற்றி பெற்றார். நோட்டாவுக்கு 808 வாக்குகளும், சுயேட்சையாக போட்டியிட்ட ரவிகிருஷ்ண ரெட்டிக்கு 1,861 வாக்குகளும் கிடைத்தது. சவுமியா ரெட்டி வெற்றி பெற்றதன் மூலம்  மாநில சட்டபேரவை வரலாற்றில் அப்பா-மகள் இருவரும் உறுப்பினராக இருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சவுமியா ரெட்டியின் தந்தை ராமலிங்க ரெட்டி பிடிஎம்  லேஅவுட் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந் தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சவுமியா ரெட்டி வெற்றி பெற்றதை காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு  வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

மூலக்கதை