தோல்வியை தடுக்க போராடும் இலங்கை அணி!

PARIS TAMIL  PARIS TAMIL
தோல்வியை தடுக்க போராடும் இலங்கை அணி!

போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 277 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் தொடங்கியது.
 
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். தனது முதல் இன்னிங்சில் 
154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தது. டாவ்ரிச் 125 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
 
இதையடுத்து ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 55.4 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச், காப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
 
தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 72 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரங்கனா ஹெராத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
 
இலங்கை அணி வெற்றி பெற 453 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. குசால் மெண்டிஸ் 94 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
 
இன்னும் ஒரு நாள் மீதமுள்ள நிலையில், கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ள இலங்கை 277 ரன்கள் எடுத்து வெற்றி பெறுமா? அல்லது 7 விக்கெட்டுகளை எடுப்பதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறுமா? என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை