உலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி.

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உலகத்தமிழர் மாநாடு  சரவண பவனில் சிக்கன் பிரியாணி.

உலகத் தமிழர் மாநாடு – கம்போடியா சியாம் ரீப் – மே 19 மற்றும் 20

தங்கவேலு சீனுவாச ராவ்

இந்த மாநாட்டிற்கான விமானப் பயணத்தை உறுதி செய்வதற்கு முன்பே இந்த மாநாட்டில் கலந்து கொள்ளத் தான் வேண்டுமா அதனால் என்ன பலன் இருக்கும் என்ற பொதுவான கேள்விகள் எனக்குள் எழுந்ததால் அதற்கான பதிலை உரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன், ஏனென்றால், பொதுவாக இந்தத் தலைப்பை வைத்துப் பார்க்கும்போது, தமிழர் மாநாடு என்றால் தமிழைப் பற்றியும் தமிழ் இலக்கியங்கள் மற்றும் இதிகாசங்களைப் பற்றியும் அக்கு வேறு ஆணி வேராக அலசி ஆராயும் தீவீர தமிழ்ப் பற்றுள்ளவர்களுக்கான மாநாடு போலத் தோன்றும்...ஆனால் எம்மைப் போன்றவர்களுக்கு அதில் பெரிய உடன்பாடு இல்லை ஏனெனில் தமிழை எளிய முறைகளில் அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லி தமிழை வளர்க்க வேண்டும் என்பதே.....சிந்து பைரவியில் சுகாஷினி அவர்கள் சிவகுமாரிடம், கர்நாடக சங்கீதத்தை பாமரனுக்கும் புரியும் வகையில் பாடினால் அது மிகப் பெரிய அளவில் அனைவரையும் சென்றடையும் என்பார் அது போலத் தமிழையும் அவ்வாறே பரப்ப வேண்டும்....இந்த மாநாட்டின் குறிக்கோளும் அதனுடன் ஒத்துப் போனாதால் மாநாட்டிற்கு செல்வதென்று முடிவெடுத்தேன்.
 
மாநாடு சொல்வது என்னவென்றால் தமிழர் மட்டுமே தமிழ் தமிழ் என்று சொல்லிக் கொண்டிருந்தால் தமிழ் வளராது...தமிழைப் பற்றி அடுத்தவர்களைப் பேச வைக்க வேண்டும்....அவ்வாறு பேச வைக்க வேண்டும் என்றால் தமிழர்கள் உலக அளவில் வாணிபம் செய்ய வேண்டும்..அவ்வாறு செய்யும் பட்சத்தில் வாணிபத்துடன் சேர்ந்து தமிழும் வளரும் என்பதே...

பொதுவாக சங்க இலக்கியங்களை உற்று நோக்கினால் கோவலன் முதல் கடல் கடந்து சென்று பல நாடுகளை வென்ற மன்னர்கள் வரை அனைவரும் வாணிபத்தை முன்னெடுத்துச் சென்று அதனுடன் இணைத்து தமிழ் கலை மற்றும் கலாச்சாரங்களை இணைத்து கோவில்களை எழுப்பி, இரண்டையும் இரண்டறக் கலந்து செய்துள்ளனர்...

ஆனால் தற்காலத் தமிழர்கள் குறிப்பாக பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் வந்த பிறகும் கூட வாணிபத்தில் விருப்பம் இல்லாமல் மாதச் சம்பளத்திற்கு வேலை செய்வதையே பெருமையாக நினைகிறார்கள். அதனால் குஜராத்திகளும் ,மார்வாடிகளும் அனைத்து தொழில்களிலும் கோலோச்சுகிறார்கள்.(ஏன்னா தமிழன் சொந்தத் தொழில் பண்ணுணா யாரும் பொண்ணு குடுக்க மாட்டேங்கிறீங்க, அவன் என்ன செய்வான், பாவம், சரி அதுக்குள்ளே நம்ம போக வேணாம்,)

எனவே அந்த மனப் பாங்கில் உள்ள இந்தக் காலத்து தமிழர்களின் சிந்தனையை திசை திருப்பி அவர்களை வாணிபத்திற்கு திரும்ப வைத்து அதன் மூலம் தமிழையும் வளர்க்க வேண்டும் என்பதே மாநாட்டின் குறிக்கோள். பொதுவாகவே இன்று வேலை பார்க்கும் இடங்களில் சீன மொழியைக் கற்றுக் கொண்டால் நல்லது என்று அதிகமானோர் சொல்லக் கேட்டதுண்டு !! அதற்கு காரணம் அவர்கள் பெரிய அளவில் வாணிபம் செய்து அவர்கள் நாட்டைத் தாண்டி இன்று ஆசியாக் கண்டம் முழுவதையும் ஆளுவதற்கான, முயற்சியில் இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள், எனவே சீன மொழி பேசினால் அவர்களிடம் வியாபாரம் செய்வது எளிது என்பதாலேயே..

அது போலத் தமிழர்களும் பெரிய அளவில் சிந்தித்து வியாபாரத்தில் இறங்கினால், உடனடியாக அல்ல, கால ஓட்டத்தில் அவர்களை விட எளிதாக, விரைவாக தமிழர்கள் அந்த இடத்தைப் பிடிக்க முடியும்.  ஏனெனில் உலக அளவில் தமிழர்களின் smartness க்கு இணையானவர்கள் மிகக் குறைவே..

அதனால்தான் இன்று கூகுள் முதல் உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் தமிழர்களை தலைமைப் பொறுப்பிலோ அல்லது பின்புலத்திலோ வைத்தே இயங்கிக் கொண்டு பெரிய அளவில் பொருளீட்டுக் கொண்டுள்ளனர். அத்தகைய திறமை கொண்டவர்கள் கூட தொழில் செய்யாமல் வேலை செய்வதற்குக் காரணம் அவர்களிடம் risk taking capability குறைவாகக் காணப் படுவதே...எனவே இது போன்ற மாநாடுகளை நடத்தி உலகமெங்கும் கொட்டிக் கிடக்கும் வணிக வாய்ப்புகளை அந்தந்த நாட்டில் உள்ள தமிழர்களை அழைத்துப் பேசச் செய்து இளையவர்களுக்கு brain storming கொடுப்பதற்காகத் தான் இந்த மாநாடு...ஆனால் வந்தவர்களில் இளையவர்கள் மிகக் குறைவாகக் காணப் பட்டது வருத்தமான செய்தி....

மாநாட்டில் ஏறத்தாழ 350 பேர் சுமார் 20 நாடுகளில் இருந்து கலந்து கொண்டனர். குறிப்பாக ஜெர்மனி , சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவில் இருந்து பெரும் செலவு செய்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களை மனதாரப் பாராட்ட வேண்டும்...கலந்து கொண்டவர்களைப் பார்வையாளர்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்காது அனைவரையும் பங்கேற்பாளர்கள் என்றே சொல்லி அழைக்கிறேன்...ஒவ்வொருவரும் அவர்களின் நாட்டில் உள்ள தொழில் சார்ந்த வாய்ப்புகளையும் அந்த நாட்டிற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகளை அவர்களுக்கு வழங்கபட்ட மிகக் குறைந்த மணித்துளிகளுக்குள் மிகச் சுவைபட எடுத்துக் கூறினார்கள்.

ஐந்து முக்கிய அமர்வுகள் நடத்தப் பட்டது. பொதுவாக மாநாடுகளில் நேரம் செல்ல செல்ல அமர்வுகளில் பார்வையாளர்களைப் பார்ப்பது அரிதாகிவிடும் ஆனால் இந்த மாநாட்டில் கடைசி வரை அனைத்து அமர்வுகளிலும் பார்வையாளர்கள் கூர்ந்து கவனித்ததை காணமுடிந்தது. அப்புறம் பணம் சம்பாரிக்க வழிசொன்னா கேக்கத் தானே வந்திருக்காங்க...காசு பணம் துட்டு மணி மணி இல்லையா..:-)

அமர்வுகளை நடத்திச் சென்றதில் முன்னாள் அரசு அதிகாரி திரு.பாலச்சந்திரன், இ.ஆ.ப (ஒய்வு) அவர்களின் பங்கு மகத்தானது..ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக 35 லட்சம் சொந்தப் பணத்தைக் கொடுத்து மேலும் பல ஏற்பாடுகள் செய்து தமிழ் இருக்கையை அமைக்க உதவி செய்த இவருக்கு தமிழ் உணர்வுடன் மிகுந்த நகைச்சுவை உணர்வும் நிறைந்து இருந்தால் அவரின் கலகலப்பு நிகழ்சிகளை உயிரோட்டமாக வைத்திருந்தது. அமர்வுகளுக்கு இடையிடேயே பார்வையாளர்களை மகிழ்விக்க தமிழர் கலை மற்றும் இலக்கியம் சம்பந்தப் பட்ட நடனங்கள், நாடகங்கள் நடத்தப் பட்டது. குறிப்பாக வெங்காயம் படக் குழுவினரின் கூத்து பெரிய அளவில் பேசப்பட்டது, பாராட்டப்பெற்றது.

ஏற்கனவே இதுபோன்ற மாநாடு காரைக்குடியை மையமாகக் கொண்டுள்ள செட்டிநாட்டுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தன வணிகர்கள் என்றழைக்கப்படும் நாட்டுக் கோட்டை செட்டியார்களால் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக மட்டும் கடந்த சில வருடங்களாக நடத்தப் பட்டு வருகிறது...இந்த மாநாடு அதே பாணியில் இன்னும் சற்று விரிந்த பார்வையில் தமிழர்கள் மாநாடு என்ற கலவையில் தமிழையும் கலந்து தெளித்துள்ளனர் என்றே சொல்லிப் பாராட்ட வேண்டும்.

இந்த மாநாட்டில் மிகப் பெரிய பிரபலங்கள் / ஜாம்பவான்கள் எல்லாம் சாதரணமானவர்களாக கலந்து கொண்டு பார்வையார்களாக அமர்ந்திருந்தார்கள். எனக்கு அருகில் இடைநிலைப் பள்ளி ஆசிரியை போல சாதாரண சேலை கட்டி அமர்திருந்தார் அவரை அறிமுகம் செய்யும் போதுதான் தெரிந்தது அவர் சென்னை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி என்று...அதேபோல் ஹார்ட்வர்ட் பல்கலைகழக பேராசிரியர்கள் முதல் சரத்குமார் மற்றும் தங்கர்பச்சான் போன்ற திரையுலக பிரபலங்கள் மற்றும் இலங்கை ராஜாங்க அமைச்சர் வரை அனைவரும் மிகவும் சாதரணமாக வலம் வந்தது அனைவருடனும் பேசித் திரிந்தது அவர்களுடைய தமிழ் உணர்வை எடுத்துக் கூறியது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியையும் சிறப்பித்தது. மேலும் ஏராளமான ஆய்வு கட்டுரைகளும் .புத்தக வெளியிடுககளும் நடை பெற்றது. தந்தி மற்றும் ஜெயா தொலைக்காட்சிகள் நிகழ்ச்சியை நேரலையில் ஒளிபரப்பு செய்தன...மலேசியா வை சார்ந்த பண்பலை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களும் பங்கு பெற்று நிகழ்ச்சிகளை ஒளி பரப்பு செய்தனர்.

மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து தமிழர் கலைகளில் அதிகத் தாக்கம் கொண்ட கம்போடிய நாட்டின் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான சியாம் ரீப் என்று அழைக்கப்படும் அங்கோர் வாட் நகரில் சிறப்பாக நடத்திய ஐவர் (மரு.தி.தணிகாச்சலம், கடல் நீரோட்ட ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு, கம்போடியா தமிழ் பேரவை தலைவர் திரு.ராமசாமி, கம்போடியா தொழிலதிபர்கள் திரு.சீனிவாச ராவ் மற்றும் திரு.ஞானம்) அணியைப் பாராட்டியே ஆக வேண்டும். எந்த மாநாட்டிலும் குறைகள் இருக்கும் ஆனால் குறைகளை நிறையாக பார்ப்பவர்களே வாழ்கையில் முன்னேறிச் சென்றுள்ளார்கள் என்பதே அனைவரும் அறிந்த ஒன்று...எனவே குறை ஒன்றும் இல்லை கோவிந்தா..!! சாரி ஐவர் அணியே..அடுத்த மாநாடு மலேசியாவில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

இந்த மாநாட்டைப் பொறுத்தவரை சிறப்பாக சொல்ல வேண்டுமானால் சரவணபவனில் அமர்ந்துகொண்டு சிக்கன் பிரியாணி சாப்பிட்டது போல் இருந்தது.!! ஏனெனில் தமிழர் மாநாட்டை இதுவரை யாரும் இந்த கோணத்தில் எடுத்து சென்றது இல்லை...ஏன் யோசித்து கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்...

சரவணபவன் போன்ற சுத்தமான சைவத் தமிழ் தளத்தில் அமர வைத்து சிக்கன் பிரியாணி போன்று சுவையான வணிக வாய்ப்புகளை அறிவார்ந்த பெரியோர்களை வைத்து பரிமாறியது மிகச் சிறப்பு...

மாநாட்டில் கலந்து கொண்ட மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறேன்...

வாழ்க வளமுடன்...
அழ.சரவணன்.
(சிறுகூடல் பட்டி – இருப்பு பாங்காக்)

குறிப்பு – தலைப்பு ஈர்ப்புக்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது, தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

மூலக்கதை