2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்காவுக்கு முக்கிய பொறுப்பு: அபிஷேக் சிங்வி தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்காவுக்கு முக்கிய பொறுப்பு: அபிஷேக் சிங்வி தகவல்

புதுடெல்லி: 2019 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி முக்கிய பங்காற்றுவார் என்றும் அதைத் தொடர்ந்து முக்கிய பொறுப்புகள் வகிப்பார் என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், ‘’எதிர்வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி மிகப்பெரிய ஒரு பொறுப்பை ஏற்பார்.

ஆட்டத்தை மாற்றி அமைப்பவராகவும் அவர் இருப்பார்’’ என்று அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்களுக்கு பதிலளித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது:பிரியங்கா காந்தி பல்வேறு வகையிலும் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளார்.

அதில் என்ன தவறு இருக்கிறது. அவர் தேர்தலில் நிற்கப்போவதாகவோ, மாட்டார் என்றோ குர்ஷித் கூறவில்லை.

இந்த இரண்டுக்கும் தொடர்பு ஏதுமில்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

ஆனால் வரும் 2019 மக்களவைத் தேர்தலில் அவர் மிகவும் முக்கியமான பங்காற்றுவார் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. கட்சியின் கூட்டம் மற்றும் இதர நடவடிக்கையிலும் அவர் கலந்துகொள்வார்.

ஆனால் அவருக்கு என்ன முக்கியப் பொறுப்பு என்பது இப்போது வரை யாருக்கும் தெரியாது. தான் பங்கேற்க வேண்டிய பொறுப்பை தேர்ந்தெடுப்பதில் பிரியங்காவுக்கு உரிமையுண்டு.

தேர்ந்தெடுத்தவற்றில் மிகச்சிறப்பாக செயல்படக் கூடியவர் அவர். இவ்வாறு சிங்வி தெரிவித்தார். பொதுவாக மக்களவை தேர்தல் சமயத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியின் சொந்த தொகுதிகளில் மட்டும் பிரியங்கா தேர்தல் பிரசாரம் செய்வார்.

அதை தாண்டி அவர் வேறு எந்த பிரசாரக் கூட்டத்திலும் பங்கேற்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை