பாஜவுக்கு பைத்தியம்: சிவசேனா பதிலடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாஜவுக்கு பைத்தியம்: சிவசேனா பதிலடி

மும்பை: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சி அண்மைக்காலமாக பாஜவை கடுமையாக விமா்சித்து வருகிறது. இந்த வகையில் தனது அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில்  பாஜவை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:மும்பையில் பால்கர் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்திருந்தார். அப்போது, அவர் சத்ரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவிக்கும் போது, காலில் செருப்பு அணிந்து சென்றார்.

இது சத்ரபதியை அவமானப்படுத்தும் செயலாகும். இதற்கு பாஜ என்ன சொல்லப்போகிறது?.

நம்பிக்கைக்கும், நேர்மைக்கும் புகழ்பெற்ற மகாராஷ்டிரா மாநிலத்தின் நற்பெயரை பாஜ கெடுக்கத் தொடங்கிவிட்டது.

இன்றைய சூழலில் பாஜ பைத்தியம் பிடித்த கொலைகாரனாக அலைகிறது. அவர்களின் பாதையில் யார் வந்தாலும், அவர்களை குத்திக் கொல்கிறது.

அனைவரையும் குற்றவாளிகளைப் போல் பார்க்கிறது. பால்கர் தொகுதியின் பாஜ எம். பி.

இறந்துவிட்டார், அவருடைய மகனுக்குப் போட்டியிட பாஜ வாய்ப்பளிக்காமல் , காங்கிரசில் இருந்துவிலகி பாஜவில் சேர்ந்த ராஜேந்திர காவித்துக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறது. இப்படிப்பட்ட செயல்கள் செய்துவிட்டு, சிவசேனா துரோகம் செய்துவிட்டதாக முதல்வர் பட்நாவிஸ் எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்.

இதில் யார் துரோகம் செய்தார்கள்?முதுகில் குத்துவது என்ற வார்த்தை முதல்வர் ஆதித்யநாத்துக்கோ அல்லது முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்க்கோ பொருத்தமானது இல்லை.

சிவசேனாவின் தலைவர் பால்தாக்ரேயின் முதுகில் பலமுறை குத்திவிட்டு, அவருக்குத் துரோகம் செய்தவர்களுக்கு எல்லாம் பாஜ வாய்ப்பு கொடுத்து, அவர்களை அரவணைத்துக் கொண்டிருக்கிறது.

ஆதலால், முதுகில் குத்துவது வார்த்தையை அவர்கள் பேச தகுதியில்லை. பால்கர் மக்களவைத் தொகுதி மட்டுமல்ல, அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலையும் தனித்துச் சந்திக்க சிவசேனா திட்டமிட்டு இருக்கிறது. நாளைப் போருக்கான சிறிய தொடக்கம்தான் இது.

இவ்வாறு சாம்னா தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை