சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழகத்தில் 12,000 பேர் தேர்வு எழுதினர்

தினகரன்  தினகரன்
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழகத்தில் 12,000 பேர் தேர்வு எழுதினர்

சென்னை :  மத்திய இடைநிலைக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும்  12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. மத்திய இடைநிலைக் கல்வி (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கியது.  நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுத மொத்தம் 28 லட்சம் பேர் இந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தனர்.  பத்தாம் வகுப்பு தேர்வை  16 லட்சத்து 38 ஆயிரத்து 428 பேர் எழுதினர். ஏப்ரல் 4ம் தேதி வரை தேர்வு நடந்தது. 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் 11 லட்சத்து 86 ஆயிரத்து 306 பேர் எழுதினர். இந்த தேர்வுகளுக்காக  நாடு முழுவதும்  4,453 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.அதில் 78 தேர்வு மையங்கள் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டன. இந்நிலையில், தேர்வில் எந்த குளறுபடிகளும் ஏற்படாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை சிபிஎஸ்இ எடுத்திருந்தது. ஆனால் 12ம் வகுப்பு தேர்வில் பொருளியல் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த தேர்வு ஏப்ரல் 25ம்  தேதியில் நடத்தப்பட்டது. இதுபோன்ற பரபரப்புகளுக்கு இடையே குறிப்பிட்ட நாளில் தேர்வு முடிவுகளை வெளியிடப்போவதாக சிபிஎஸ்இ அறிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் இணைய தளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணைய தளமான www.results.nic.in, www.cbseresults.nic.in என்ற இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மூலக்கதை