கல்வி மேம்பாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி பல்கலை விழாவில் பிரதமர் மோடி பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கல்வி மேம்பாட்டுக்கு ரூ.1 லட்சம் கோடி பல்கலை விழாவில் பிரதமர் மோடி பேச்சு

போல்பூர்: ரவீந்திரநாத் தாகூர் நிறுவிய விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் 49-வது பட்டளிப்பு விழா மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் போல்பூர் அருகே உள்ள சாந்திநிகேதனில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் மோடி பேசியதாவது:இங்கு நான் வந்தபோது சில மாணவர்கள் என்னிடம் இங்கே சரியான முறையில் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்று முறையிட்டனர். அதற்காக மாணவர்களிடம் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இங்கே உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து வித இடர்ப்பாடுகளுக்காகவும் வருத்தம் தெரிவிக்கிறேன். இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தாகூரின் லட்சியங்களை முன்னெடுத்து செல்லவேண்டும். ஏனென்றால் அவருடைய கல்விச் சொத்து இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை.

அதையும் கடந்து நிற்கிறது. அதனால்தான் ரவீந்திரநாத் தாகூர் இன்றும் உலகளாவிய குடிமகனாக போற்றப்படுகிறார்.

மாணவர்கள் கல்வி கற்று பட்டம் பெறுவது மட்டுமே போதாது.

காலத்துக்கேற்ப பொருத்தமாக எதைக் கற்றுக் கொண்டோம் என்பது அதை விட முக்கியம். விஸ்வபாரதி பல்கலைக்கழகம் கோவில் போன்றது.

இங்கு குருவாக நான் வருகை தந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இங்கே விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, 2021-ம் ஆண்டில் 100 முதல் 200 கிராமங்களை தத்து எடுக்கப் போவதாக தெரிவித்தார்கள்.

இந்த கிராமங்கள் சுய சார்பு கொண்டவையாகவும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகவும், மின்னணு கல்வி முறை கொண்டதாகவும் அனைத்து அடிப்படை வசதிகளை கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் எனது அரசாங்கம் 4 அடி எடுத்து வைக்கும்.

கல்வித்துறையின் மேம்பாட்டுக்காக ரூ. 1 லட்சம் கோடியை செலவிடுதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது.

இவ்வாறு மோடி பேசினார்.

.

மூலக்கதை