5வது ஆண்டில் மோடி அரசு : ஊழலை ஒழித்து வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுவதாக மத்திய அரசு பெருமிதம்

தினகரன்  தினகரன்
5வது ஆண்டில் மோடி அரசு : ஊழலை ஒழித்து வெளிப்படையான நிர்வாகம் நடைபெறுவதாக மத்திய அரசு பெருமிதம்

டெல்லி : பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் ஊழலை ஒழித்து வெளிப்படை  தன்மை உடன் கூடிய நிர்வாகம் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அரசு பதவி ஏற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வகையில் பயிர்காப்பீடு, குறைந்தபட்ச உற்பத்தி விலை அதிகரிப்பு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமான பணப் பரிவர்த்தனைகளை வெளிக் கொண்டு வரப்பட்டதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயல்நாடுகளில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்திற்கு ஈடான சொத்துக்களைக் கைப்பற்ற வரி ஏய்ப்புச் சட்ட திருத்தப்பட்டதாகவும், பினாமி சொத்து சட்டத்தின் மூலம் கருப்புப் பணம் உருவாகுவது தடுக்கப்பட்டதாகவும், தலைமறைவான பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய சட்ட அமலாக்கம் செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு கோரியுள்ளது. 50 கோடி கிராமங்களை உள்ளடக்கிய சகாதாரக் காப்பீடு திட்டம், ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி, அனைத்து கிராமங்களுக்கும் மின்னிணைப்பு, கிராமப்புற பெண்களுக்கு  எரிவாயு இணைப்பு போன்றவையும் சாதனையாக கூறப்பட்டுள்ளன. பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஒரு கோடி ஏழைகள் வீடுகளைப் பெறுவார்கள் என்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏழரை கோடிக்கும் மேல் கழிவறைகள் கட்டப்பட்டன என்றும் கூறப்பட்டுள்ளது. ரூ. 2.50 லட்சம் கோடி செலவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் மேம்படுத்தப்படுவதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் 1.69 லட்சம் கிலோமீட்டர் ஊரக சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மோடி ட்விட்டர் பதிவு கடந்த 4 ஆண்டுகளாக வளர்ச்சி என்பது துடுப்புமிக்க மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்று  பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.மேலும் அவர் கூறியிருப்பதாவது.\'பாஜக அரசு மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். உத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5வது ஆண்டில் தொடர்ந்து செயல்படும்.மக்களின் ஆதரவால்தான் மத்திய அரசு வலிமையாக செயல்பட முடிகிறது\' ,இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.

மூலக்கதை