இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத்!

PARIS TAMIL  PARIS TAMIL
இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத்!

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத் அணி. 
 
ஐபிஎல் கிரிக்கெட் - பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத்
ஐபிஎல் 2018 தொடரின் குவாலிபையர் 2 கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
 
டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் தவான், சகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி 7.1 ஓவரில் 56 ரன்களாக இருக்கும்போது பிரிந்தது. தவான் 24 பந்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் 3 ரன் எடுத்து அவுட்டானார்.
 
தொடர்ந்து, சகா 35 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 28 ரன்களும், தீபக் ஹூடா 19 ரன்களும், யூசுப் பதான் 3 ரன்களும், பிராத்வைட் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
 
இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் அதிரடியாக ஆடி 10 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 34 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 2 பந்தில் ஐந்து ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
கொல்கத்தா சார்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ஷிவம் மாவி, சுனில் நரேன், பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதையடுத்து, 175 ரன்களை இலக்காக கொண்டு கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின், சுனில் நரேன் ஆகியோர் இறங்கினர்.
 
அணியின் எண்ணிக்கை 40 ஆக இருக்கும்போது சுனில் நரேன் 26 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய நிதிஷ் ரானா 22 ரன்னிலும், ராபின் உத்தப்பா 2 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மான் கில் 20 பந்தில் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
 
இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது. 
 
ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், சித்தார்த் கவுல், பிராத்வைட் ஆகியோர் 2 விக்கெட்டும், ஷாகிப் அல் ஹசன் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
 
இதைத்தொடர்ந்து, கொல்கத்தாவை வீழ்த்திய ஐதராபாத் அணி, ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

மூலக்கதை