மார்ச் 27ம் தேதியில் இருந்து முதல் உலை செயல்படவில்லை ஸ்டெர்லைட் நிறுவனம் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மார்ச் 27ம் தேதியில் இருந்து முதல் உலை செயல்படவில்லை ஸ்டெர்லைட் நிறுவனம் தகவல்

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதம் 27ம் தேதியில் இருந்து ஸ்டெர்லைட் ஆலையின் முதல் உலை இயங்கவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் அடிக்கல் நாட்டப்பட்ட காலம் முதலே அந்த நிறுவனத்துக்கு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்திலிருந்து வெளிவரும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினர்.   இதை கண்டுகொள்ளாத ஸ்டெர்லைட் நிறுவனம், தனது ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக ஒப்புதல் கோரி விண்ணப்பம் செய்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் இதை எதிர்த்து கடந்த 100 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சில தினங்களுக்கு முன்பு மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு காரணமாக 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

80க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சூடுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

துப்பாக்கி சூடு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பங்கு சந்தையில் எதிரொலித்தது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வேதாந்தா குழும பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால் அந்த குழுமத்தின் பங்குகள் சரிய தொடங்கியுள்ளன. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 27ம் தேதியில் இருந்து முதல் உலை இயங்கவில்லை என்று ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய, மும்பை பங்கு சந்தைகளுக்கு எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளித்துள்ளது.

அரசின் உத்தரவின்படி, முதல் உலை மூடப்பட்டுள்ளது என்றும், இந்த உலையின் தற்போதைய மதிப்பு ரூ. 2,100 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலை மூடப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

.

மூலக்கதை