ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உறுதி தூத்துக்குடியில் அமைதி திரும்புகிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு உறுதி தூத்துக்குடியில் அமைதி திரும்புகிறது

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உறுதியளித்துள்ளதால் தூத்துக்குடியில் இன்று காலை முதல் படிப்படியாக அமைதி திரும்புகிறது. 3 நாட்களுக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

எனினும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர்.

65க்கும் மேற்பட்டோர் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். துப்பாக்கி சூட்டில் பலியானோரின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் நேற்று ஒருசில இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு தீ வைப்பு, வாகனங்கள் எரிப்பு, காவல் நிலையம் முன் பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. கலவரம் பரவுவதை தடுக்க தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் முதல் இணையதள சேவை முடக்கப்பட்டது.

நிலைமையை சமாளிக்கவும், கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரவும் ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப்சிங்பேடி, டேவிதார், ஏடிஜிபி விஜயகுமார் மற்றும் ஐஜிக்கள் சைலேஷ்குமார்யாதவ், வரதராஜூ, சண்முகராஜேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் தூத்துக்குடி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களுடன் புதிய கலெக்டர் சந்தீப்நந்தூரி, எஸ்பி முரளிரம்பா ஆகியோர் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி நேற்றிரவு அறிவித்தார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் படிப்படியாக அமைதி திரும்புகிறது. நேற்றிரவு முதல் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை.

எனினும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பேரணி மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை நீடிக்கிறது. 3 நாட்களுக்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் இன்று காலை வழக்கம்போல் திறக்கப்பட்டது. பொதுமக்கள் காய்கனி வாங்கிச் சென்றனர். துப்பாக்கி சூட்டில் பலியாகி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள 13 பேரில் 6 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மற்ற 7 பேரின் உடல்கள் இன்றும், நாளையும் பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிரேத பரிசோதனை முடிந்தாலும் அவை தொடர்பான அறிக்கை தயாரித்து உடல்களை பதப்படுத்தி வைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதால் அவைகளை உறவினர்களிடம் உடனடியாக ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் இதுபோன்ற காரணங்களால் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

.

மூலக்கதை