திருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தில் 90% கடைகள் அடைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தில் 90% கடைகள் அடைப்பு

சென்னை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90% கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன.

அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பேரணி சென்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இதை கண்டித்தும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரியும் திமுக மற்றும் அனைத்து கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முழு அடைப்புக்கு வியாபாரிகளும் ஆதரவு தெரிவித்திருந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருமழிசை, வெள்ளவேடு, பேரம்பாக்கம், கடம்பத்தூர், மப்பேடு , ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி உட்பட அனைத்து பகுதிகளிலும், கடைகள், ஓட்டல்கள் உட்பட வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன.

பள்ளிப்பட்டு: அம்மையார்குப்பம், பள்ளிப்பட்டு, ஆர். கே. பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பஸ்களும் குறைந்தளவு ஓடியது. புழல்: புழல், லட்aசுமிபுரம், செங்குன்றம், பாடியநல்லூர், சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிறு கடைகள், ஓட்டல்கள், சலூன்கள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.

அசம்பாவிதத்தை தவிர்க்க புழல், செங்குன்றம், சோழவரம் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திருத்தணி: திருத்தணி, திருவலங்காடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஒரு சில தனியார் மற்றும் அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

இதனால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சேடி காணப்பட்டது. ஆவடி: ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பஸ்களும் குறைவாக இயக்கப்பட்டது. திருவொற்றியூர்: திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. முன்னாள் நகராட்சி தலைவர் திரிசங்கு தலைமையில் நிர்வாகிகள் திருவொற்றியூர் மண்டல வார்டு அலுவலகம் முன் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், திருவொற்றியூர், தேரடி சந்திப்பில் பகுதி செயலாளர் தி. மு. தனியரசு தலைமையில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மாவட்டத்தில் குறைந்தளவே அரசு பஸ்கள் இயங்கின.

குறிப்பாக நெடுஞ்சாலை வழியாக செல்லும் அரசு பஸ்கள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. கிராமங்கள் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன.

முழுஅடைப்பால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருவள்ளூர் பஸ் நிலையம், பஜார் வீதி வெறிச்சோடி கிடந்தது. மாவட்டம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. செங்கழுநீரோடை வீதி, ஜவகர்லால் வீதி பகுதிகளில் இருந்த தங்க நகைக்கடைகள், ஜவகர்லால் நேரு காய்கறி மார்க்கெட், ராஜாஜி மார்க்கெட், ரயில்வே சாலைகளில் உள்ள மளிகைக்கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

காந்தி சாலை, காமராஜர் சாலை பகுதிகளில் உள்ள பட்டு ஜவுளிக்கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. கடையடைப்பையொட்டி வணிக நிறுவனங்களும், ஓட்டல்களும், பட்டுசேலை கடைகளும் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகளும், பட்டுசேலை எடுக்க வந்த வெளிமாநிலத்தவர்களும் கடும் அவதிப்பட்டனர்.

பஸ் நிலையத்தில் ஓரிரு கடைகள் மட்டும் திறந்திருந்தன. ஒரு சில அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் இயக்கப்பட்டன.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, மறைமலைநகர், சிங்கபெருமாள் கோயில், காட்டாங்கொளத்தூர், பாலூர், ஆத்தூர், களத்தூர், வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் யாரும் இன்றி காலியாக பஸ்கள் இயக்கப்படுகிறது.

மறைமலைநகர் தொழிற்பேட்டை, மகேந்திராசிட்டி தொழிற்பேட்டை போன்றவற்றில் பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை.   பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடவில்லை. திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், கூவத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. வாலாஜாபாத்: வாலாஜாபாத், அய்யம்பேட்டை, ஏகனாம்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. உத்திரமேரூர்: உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள திருப்புலிவனம், நெல்வாய், சாலவாக்கம், மானாம்பதி, பெருநகர், கம்மாளம்பூண்டி, எண்டத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டது. இதனால் உத்திரமேரூர் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

தாம்பரம்: தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

.

மூலக்கதை