ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் : இயக்குநர் சங்கம்

தினமலர்  தினமலர்
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் : இயக்குநர் சங்கம்

தூத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த பேரணி, வன்முறை களமாக மாற, அதை தடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கமும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என கோரியுள்ளது.

இதுதொடர்பாக இயக்குநர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி மக்கள் உயிர்களை இழந்ததற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதற்கு காரணமான போலீஸின் அராஜக செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையால் பல உயிர்களை இழக்கிறோம், ஆலையை மூடுங்கள் என தூத்துக்குடி மக்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு தீர்வை கொடுக்காமல் தூப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டனத்திற்குரியது.

இதுபோன்று உயிர் இழப்பு நிகழக்கூடாது என்பதற்காகத்தான் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கும், அந்த ஆலைக்கு வழங்கப்படும் மின் இணைப்பைத் துண்டிக்கவும் உத்தரவிட்டார். ஆனால் ஆலை நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு அந்த தடையை திரும்ப பெற்றது. அப்போதே நிரந்தரமான தடையை போட்டிருந்தால், இன்று நாம் 13 உயிர்களை இழந்திருக்க மாட்டோம்.

தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு, துப்பாக்கி சூட்டினால் தீர்வு காண முடியாது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண, உடனே ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும். அதற்கான வழிமுறைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை