திவால் சட்ட திருத்தத்திற்கு, ‘பிக்கி’ வரவேற்பு; வாராக் கடன் வழக்குகள் விரைவாக பைசலாகும்

தினமலர்  தினமலர்
திவால் சட்ட திருத்தத்திற்கு, ‘பிக்கி’ வரவேற்பு; வாராக் கடன் வழக்குகள் விரைவாக பைசலாகும்

புதுடில்லி : மத்­திய அரசு, திவால் சட்ட திருத்­தத்­திற்கு அளித்­துள்ள ஒப்­பு­தலை, இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் கூட்­ட­மைப்­பான, ‘பிக்கி’ வர­வேற்­றுள்­ளது.

பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான மத்­திய அரசு, நலிந்த நிறு­வ­னங்­களை, திவால் நிலை­யில் இருந்து மீட்­க­வும், அவ்­வாறு முடி­யாத பட்­சத்­தில், திவால் நடை­மு­றையை விரைந்து முடிக்­க­வும் உத­வக் கூடிய திவால் சட்­டத்தை, 2016, டிசம்­ப­ரில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. இதை­ய­டுத்து, 2017ல், ரிசர்வ் வங்கி பரிந்­து­ரைப்­படி, வாராக் கடன் தொடர்­பாக, 12 நிறு­வ­னங்­கள் மீது, திவால் நட­வ­டிக்­கைக்கு விண்­ணப்­பிக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், கட்­டு­மான நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து வீடு வாங்­கு­வோர் எதிர்­கொள்­ளும் பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண­வும், குறு, சிறு, நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­க­ளுக்கு விதி­மு­றை­களில் சலு­கை­களை வழங்­க­வும், திவால் சட்­டத்­தில் திருத்­தம் செய்ய வேண்­டும் என, தொழில் கூட்­ட­மைப்­பு­கள் கோரிக்கை விடுத்­தன.

இதை ஏற்று, மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் துறை செய­லர், இன்­ஜெட்டி சீனி­வாஸ் தலை­மை­யில், 14 பேர் அடங்­கிய திவால் சட்­டக் குழுவை, மத்­திய அரசு அமைத்­தது. இக்­குழு, பல்­வேறு தரப்­பி­ன­ரின் கருத்­துக்­களை கேட்­ட­றிந்து, திவால் சட்­டத்­தில் மேற்­கொள்ள வேண்­டிய திருத்­தங்­கள் அடங்­கிய பரிந்­து­ரையை, மார்ச் 23ல், மத்­திய அர­சி­டம் வழங்­கி­யது.

இந்த பரிந்­து­ரை­களை ஏற்ற மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு, நேற்று முன்­தி­னம், திவால் சட்­டத்­தில் திருத்­தங்­கள் செய்து, அவ­சர சட்­டம் பிறப்­பிக்க ஒப்­பு­தல் வழங்­கி­யது. இதை­ய­டுத்து, ஜனா­தி­ப­தி­யின் ஒப்­பு­த­லு­டன், திவால் சட்ட திருத்­தத்­திற்­கான அவ­சர சட்­டம் அம­லுக்கு வர உள்­ளது.

இது குறித்து, பிக்கி தலை­வர், ராஷேஷ் ஷா கூறி­ய­தா­வது: திவால் சட்ட திருத்­தத்­திற்கு, மத்­திய அரசு ஒப்­பு­தல் அளித்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. இத­னால், வாராக் கடன் தொடர்­பாக உள்ள ஏரா­ள­மான வழக்­கு­கள் விரைந்து பைச­லா­கும். திவால் நட­வ­டிக்­கைக்கு உள்­ளா­கும் குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­களை நிறு­வி­ய­வர்­களும், ஏலத்­தில் பங்­கேற்க, சட்ட திருத்­தம் வகை செய்­கிறது. இதன் மூலம் எண்­ணற்ற குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின் வாராக் கடன் பிரச்­னை­கள் விரை­வில் முடி­விற்கு வரும்.

வங்­கி­க­ளின் இடர்ப்­பாட்டு கடன்­களை குறைக்க, மத்­திய அர­சும், ரிசர்வ் வங்­கி­யும் பாடு­பட்டு வரு­கின்­றன. வசதி இருந்­தும் கடனை திரும்­பச் செலுத்­தா­மல் உள்­ளோர், தங்­கள் நிறு­வ­னங்­கள் ஏலத்­திற்கு வரும்­போது, அதில் பங்­கேற்க தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­ச­ம­யம், ஏமாற்­றும் நோக்­க­மின்றி, உண்­மை­யா­கவே தொழில் நசிவு கார­ண­மாக, கடனை திரும்­பச் செலுத்­தா­மல் உள்ள குறு, சிறு, நடுத்­தர தொழில் நிறு­வ­னர்­கள், ஏலத்­தில் பங்­கேற்க, சட்ட திருத்­தம் வாய்ப்­ப­ளிக்­கிறது.

அத்­து­டன், கடன் வழங்­கும் வங்­கி­க­ளுக்கு நிக­ரான அந்­தஸ்தை, வீடு வாங்­கு­வோ­ருக்­கும் வழங்­கி­யுள்­ளது. அத­னால், ஒப்­பந்த விதி­க­ளுக்கு மாறாக செயல்­படும் கட்­டு­மான நிறு­வ­னங்­க­ளால் ஏற்­படும் பாதிப்­பிற்கு, வீடு வாங்­கு­வோர் நிவா­ர­ணம் பெற­லாம். இவ்­வாறு அவர் கூறினார்.

திவால் சட்­டம், எந்த நோக்­கத்­திற்­காக கொண்டு வரப்­பட்­டதோ, அதை நோக்கி செயல்­ப­டத் துவங்கி விட்­டது. சமீ­பத்­தில், ‘டாடா ஸ்டீல்’ நிறு­வ­னம், ‘பூஷண் ஸ்டீல்’ நிறு­வ­னத்தை அதிக மதிப்­பில் கைய­கப்­ப­டுத்­தி­யதை இதற்கு உதா­ர­ண­மாக கூற­லாம்.
-ராஷேஷ் ஷா, தலைவர், ‘பிக்கி’

மூலக்கதை