மதுரையில் 5 பஸ்கள் மீது கல்வீச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதுரையில் 5 பஸ்கள் மீது கல்வீச்சு

மதுரை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து மதுரையில் இன்று அதிகாலை வெவ்வேறு இடங்களில் 5 பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல இடங்களில் மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நடந்த போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் 3ம் நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே மறியலில் ஈடுபட்ட  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் புலிகள் உள்ளிட்ட பல அமைப்புகளை சேர்ந்த 87 பேர் கைதாகினர். இதனை தொடர்ந்து தமிழ் புலிகள் அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அந்த அமைப்பை சேர்ந்த 11 பேரை, போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர். மதுரை அருகே திருநகரில் யூனியன் அலுவலகம் முன்பு ஏஐடியுசி சார்பிலும், ஒத்தக்கடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் மறியல் நடந்தது.

இதனால் மதுரை-மேலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவங்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டதாக 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரையில் இன்று அதிகாலை பழங்காநத்தம், செனாய் நகர், பூ மார்க்கெட், தெற்குவாசல், மாட்டுத்தாவணி உள்பட 5 இடங்களில்  அரசு பஸ்கள் மீது கற்களை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கையில் 50 பேரும், தேனியில் 85 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டோரும், ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல்லில் 200க்கும் மேற்பட்டோரும் மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர். குமரி மாவட்டம்நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது.

கரியமாணிக்கபுரம் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்து விட்டுச் சென்றனர். இதே போல் மற்றொரு அரசு பஸ் கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

செங்கட்டி பாலம் அருகே பஸ் செல்லும் போது மர்ம நபர்கள் பஸ்சின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இரு சம்பவங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கும்பகோணம் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு தஞ்சையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் சுந்தரபெருமாள் கோயில் அருகே வந்தபோது பைக்கில் வந்த 2 பேர் அந்த பஸ்சின் மீது பீர் பாட்டில்களை வீசினர்.

இதில் கண்ணாடி உடைந்தது. இதுபோலபண்டாரவாடை, நரசிங்கம்பேட்டை ஆகிய இடங்களிலும் நேற்று இரவு 10. 30 மணி அளவில் 2 பஸ்களின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதிலும் அந்த பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகிறார்கள்.


.

மூலக்கதை