தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து முதல்வர் அறை முன்பு மு.க.ஸ்டாலின் தர்ணா

தமிழ் முரசு  தமிழ் முரசு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து முதல்வர் அறை முன்பு மு.க.ஸ்டாலின் தர்ணா

சென்னை: தூத்துக்குடி சம்பவம் குறித்து முறையிட சென்ற ஸ்டாலினை முதல்வர் சந்திக்க மறுத்ததால், அவரது அறை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

பின்னர், வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து மார்ச் 19ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த  நிலையில், மீண்டும் வருகிற 29ம் தேதி காலை 10. 30 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே. ஆர். ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் மு. க. ஸ்டாலின், ‘‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகி உள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வெறும் கண்துடைப்புக்காக இடம் மாற்றம் என்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து, அவர் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து வெளிநடப்பு செய்தார். அவருடன் கே. ஆர். ராமசாமியும் வெளிநடப்பு செய்தார்.

தொடர்ந்து திமுக, காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக 4ம் நுழைவு வாயில் முன்பு 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து முதல்வரை சந்திக்க மு. க. ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சென்றனர்.

அப்போதும் அவர்கள் பின்னால் போலீசார் படையெடுத்து சென்றனர். ஒவ்வொருவர் பின்னாலும் 10 போலீசார் புைட சூழ சென்றனர். இந்நிலையில், மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்திக்க முதல்வர் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து முதல்வர் அலுவலகம் முன்பு மு. க. ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மு. க. ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

தொடர்ந்து, மு. க. ஸ்டாலின் 4வது நுழைவு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன், திமுக எம்எல்ஏக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தலைமை செயலகத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது. தொடர்ந்து, ஏரளாமான போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

மேலும், ராஜாஜி சாலையும் இழுத்து மூடப்பட்டது
மு. க. ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து திமுக தொண்டர்கள் தலைமை செயலகத்துக்கு வெளியே மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில், கோட்டையில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின் தொண்டர்களுடன் ராஜாஜி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்.

அவருடன் திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கே. ஆர். ராமசாமி உள்ளிட்டோரும் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர்.

.

மூலக்கதை