செல்போன் டவரில் ஏறி மதிமுக பிரமுகர் போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
செல்போன் டவரில் ஏறி மதிமுக பிரமுகர் போராட்டம்

கீழ்வேளூர்: நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த வண்டலூர் ரோட்டு தெருவை சேர்ந்த நாகப்பன் மகன் திலகர்(35). மதிமுக ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர்.

இவர் இன்று அதிகாலை 3. 15 மணி அளவில் மதிமுக கொடியை கையில் ஏந்தி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோஷமிட்டபடியே நடந்து சென்றார். பின்னர் அங்கிருந்த ஒரு செல்போன் டவரில் பாதி உயரத்துக்கு ஏறி நின்று கொண்டார்.

140 அடி உயரம் கொண்ட டவரில், சுமார் 60 அடி உயரத்தில் நின்று, கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வேளாங்கண்ணி காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் மற்றும்  கீழ்வேளூர், வேளாங்கண்ணியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சென்று திலகரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு காரணமான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும், தூத்துக்குடிக்கு துணை ராணுவத்தை வரவழைக்க கூடாது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இந்த 3 கோரிக்கைகளையும் நிறைவேற்றினால் தான், கீழே இறங்கி வருவேன்.

அதுவரை இங்கேயே தான் அமர்ந்திருப்பேன் என்றார்.

இதுபற்றி அறிந்ததும் கலெக்டர் சுரேஷ் குமார் செல்போனில் பேச, அதை தீயணைப்பு வீரர் ஒருவர் டவரில் ஏறி திலகரிடம் கொடுத்தார்.

திலகரும் வாங்கி பேசினார். ஆனால் கலெக்டர் கேட்டுக்கொண்டும் போராட்டத்தை கைவிட திலகர் மறுத்து விட்டார்.

இதற்கிடையே இந்த தகவல் மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு சென்றது. அவரும் உடனடியாக செல்போனில் பேசினார்.

அதேபோல் தீயணைப்பு வீரர் டவரில் ஏறிச்சென்று திலகரிடம் போனை கொடுத்தார். அப்போது வைகோ போராட்டத்தை கைவிட கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்று திலகர் போராட்டத்தை கைவிட்டு, டவரில் இருந்து இறங்கி வந்தார். அதிகாலை 3. 15 மணிக்கு டவரில் ஏறியவர், காலை 9. 15 மணிக்கு தான் இறங்கினார்.   இதனால் 6 மணி ேநரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

பின்னர் திலகரை போலீசார் வேளாங்கண்ணி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.


.

மூலக்கதை