தூத்துக்குடிக்கு அமைச்சர்களை அனுப்ப வேண்டும் தலைவர்கள் வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தூத்துக்குடிக்கு அமைச்சர்களை அனுப்ப வேண்டும் தலைவர்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடி: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தூத்துக்குடியில் கூட்டாக அளித்த பேட்டி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்காக பொதுமக்கள் அமைதியாக போராடி வந்தனர்.

100வது நாள் போராட்டம் பெரிய அளவில் நடைபெறும் என கருதி மாவட்ட கலெக்டர் 144 தடை உத்தரவு விதித்தார். போராட்டத்தை கட்டுப்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எந்தவிதமான உத்தரவாதத்தையும் மாவட்ட நிர்வாகம் அளிக்கவில்லை. போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான செயலை கட்டவிழ்த்துள்ளனர்.

எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் காவல்துறையினர் மேற்கொள்ளாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்துக்கு திரண்ட பின்னர் அவர்களை அச்சுறுத்தும் விதமாக கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கி சூடு என வன்முறையை பிரயோகித்துள்ளனர். இதில் 12 உயிர்கள் பலியாகி உள்ளன.

65க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்செயல் கண்டனத்துக்குரியது.
2வது நாளான நேற்றும் அமைதியை நிலைநாட்டாமல் மீண்டும் துப்பாக்கி சூட்டை நடத்தி மேலும் படுகொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

இந்த சம்பவங்களை கண்டிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூ. செயலாளர் பாலகிருஷ்ணன் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட வேண்டியதன் காரணமாகவும், நாங்கள் கேட்டுக்கொண்டதன் பேரிலும் அவர் போராட்டத்தை விலக்கி கொண்டுள்ளார்.

மத்திய, மாநில அரசுகள் எதையும் கண்டு கொள்ளாமல் கண்மூடித்தனமாக இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ரத்து செய்ய வேண்டும். அமைச்சர்களை அனுப்பி இங்குள்ள நிலவரத்தை கண்டறிந்து அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று தமிழகம் முழுவதும் கடையடைப்புக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் வெள்ளையன் அழைப்பு விடுத்துள்ளார். இதுபோன்ற போராட்டங்களில் நாங்களும் கலந்து கொள்வோம்.

எங்களது பிரதான கோரிக்கையே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்பது தான்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

.

மூலக்கதை